|
நாட்டரசன்கோட்டையில் "செவ்வாய் பொங்கல் விழா' Jan 22, 14 |
|
நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில், நகரத்தார்களின் செவ்வாய் பொங்கல் விழா நேற்று நடந்தது.
நாட்டரசன்கோட்டையில் ஆண்டு தோறும், தை பொங்கலுக்கு அடுத்து வரும் முதல் செவ்வாய் அன்று, "செவ்வாய் பொங்கல்' விழாவை பல ஆண்டுகளாக நகரத்தார்கள் நடத்தி வருகின்றனர்.
இப்பொங்கல் விழாவிற்காக, நகரத்தார்களிடம், குடும்பம் வாரியாக 895 புள்ளிகளிடம், புள்ளிவரி வசூல் செய்திருந்தனர். நேற்று, கண்ணுடையநாயகி அம்மன் கோவில் சன்னதியில், வெள்ளி குடத்தில், குடும்ப தலைவர் (புள்ளிகள்) பெயர்களை சீட்டில் எழுதி போட்டு, குலுக்கி எடுத்தனர்.முதல் சீட்டில், ராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் பெயர் தேர்வானது. அக்குடும்பத்தினர், முதல் பொங்கல் வைக்க அழைக்கப்பட்டனர். நேற்று மாலை 5 மணிக்கு, முதல் பொங்கல் வைப்பவரின் மண் பானையில், அனைத்து நகரத்தார்களும் பால் ஊற்றி, பொங்கலை துவக்கி வைத்தனர். இதையடுத்து, மற்றவர்கள் பொங்கல் வைத்தனர்.
இங்கு,"வெண் பொங்கல்' மட்டுமே வைக்கப்படும். பொங்கல் வைத்த பின், கண்ணுடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு சாமி புறப்பாடும் நடந்தது. |
|
|
|
|
|