Nagaratharonline.com
 
தீபாவளி விசேஷ ரெயில்; 2 ஆயிரம் பேர் பயணம் செய்யலாம்  Oct 6, 09
 
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. பஸ், ரெயில்களில் அனைத்திலும் இடமில்லை. சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் உயர்ந்து வருகிறது.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.

எத்தனை ரெயில்கள் விட்டாலும் கூட்டம் குறைந்த பாடில்லை. நாகர்கோவி லுக்கு சிறப்பு ரெயில்கள் தினமும் விட்டபோதிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதையொட்டி தெற்கு ரெயில்வே ஒரு பகல் நேர சிறப்பு ரெயிலை விடுகிறது.

தீபாவளிக்கு முந்தின நாளான 16-ந்தேதி இரவுக்குள் பயணிகள் சென்றடையும் வகையில் கடந்த ஆண்டு பகல் நேர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு எண். 0603 என்ற சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது.

இந்த ரெயில் 16-ந்தேதி காலை 9.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படு கிறது. இரவு 10.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

திருநெல்வேலியில் இருந்து (எண். 0604) சென்னைக்கு 18-ந்தேதி புறப்படுகிறது. காலை 9.35 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 10.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயில் 21 பெட்டிகளுடன் செல்கிறது. படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக 2-ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் வசதி உள்ள பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. உட்கார்ந்து செல்லும் சீட்டுகள் கொண்ட 12 பெட்டிகளும், ஒரு ஏ.சி. சேர்கார் பெட்டியும், 6 முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகளும், இணைக்கப்பட்டுள்ளன.

2-ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் வசதியுள்ள ஒரு பெட்டியில் 108 பேர் பயணம் செய்யலாம். அதன்படி 12 பெட்டியில் 1296 பயணிகள் உட்கார்ந்து பயணம் செய்ய முடியும். ஏ.சி. சேர்கார் பெட்டியில் 72 பேர் உட்கார வசதி உள்ளது. முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் அதிகபட்சம் 150 பேர் வரை பயணம் செய்யலாம். அதன்படி 6 பெட்டியில் 900 பயணிகள் பயணிக்கலாம். மொத்தம் 2500 பயணிகள் வரை இந்த ரெயிலில் பயணம் செய்ய முடியும். தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு வசதியாக இரவுக்குள் இந்த ரெயில் நெல்லையை சென்றடையும்.

முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் திருநெல்வேலிக்கு செல்ல கட்டணம் ரூ.135 ஆகும். 2-ம் வகுப்பு உட்கார்ந்து செல்வதற்கு முன்பதிவு கட்டணம் ரூ.15 யுடன் சேர்த்து ரூ.147 ஆகும். குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்கள் பயன் அடைவதற்காக இந்த ரெயில் விடப்படுகிறது.

கொள்ளை கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களுக்கு பதில் இந்த ரெயில் மூலம் பயணிகள் பயனடையலாம்.

தீபாவளி விசேஷ ரெயில் தென்மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதேபோல் மேலும் 2 விசேஷ ரெயில் விடப்பட்டால் தென்மாவட்ட மக்கள் மகி¢ழ்ச்சி அடைவார்கள். பஸ் நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம்

source :Maalai malar 06/10/09