|
காரைக்குடியில் செட்டிநாடு பாரம்பரிய விழா Oct 14, 09 |
|
காரைக்குடி, அக். 13: செட்டிநாடு பாரம்பரிய விழா மற்றும் உலக சுற்றுலா தின விழா, திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் காரைக்குடியில் நடைபெற்றது.
கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் தலைமை வகித்தார். கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை அவர் வழங்கினார்.
செட்டிநாடு சுற்றுலா அலுவலர் க. தர்மராஜ் வரவேற்றார். காரைக்குடி நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரை வாழ்த்திப் பேசினார்.
முன்னதாக, செட்டிநாடு பாரம்பரிய விழா குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பெரியார் சிலையிலிருந்து புறப்பட்டு கண்ணதாசன் மணிமண்டபத்தை அடைந்தது பேரணி.
அதைத் தொடர்ந்து மாவட்ட கலைமன்றம் சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலையில் பள்ளத்தூரில் பாரம்பரிய நடைப்பயணமும், மாலையில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் பெண்களுக்கான கோலப் போட்டியும், மாவட்ட கலைமன்றம் சார்பில் தமிழிசைப் போட்டியும் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து "பொறுப்பான செட்டிநாடு சுற்றுலா வளர்ச்சி' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட கூடுதல் ஆட்சியர் எஸ். நாகராஜன் தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்புரையாற்றினார்.
பேராசிரியர் அய்க்கண், தொல்லியல் துறை உதவி இயக்குநர் சொ. சுந்தரலிங்கம், தானம் அறக்கட்டளை க.ப. பாரதி, நபார்டு வங்கி எஸ். கண்ணப்பன், காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் நா. வள்ளி சொக்கலிங்கம் உள்ளிட்டோர், செட்டிநாடு பாரம்பரியம் பற்றிய பல்வேறு தகவல்கள் குறித்துப் பேசினர்.
விழாவில், கோலப் போட்டிகளில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பொன்னம்பல அடிகளார் பரிசு வழங்கினார். மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் எஸ். நடராஜன் விழாவை தொகுத்து வழங்கினார். தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாந்தா வரவேற்றார். காரைக்குடி நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
source : dinamani 14/10/09 |
|
|
|
|
|