Nagaratharonline.com
 
பாம்பாட்டி கூடையில் இருந்து வெளியேறியது: பஸ்சில் பீதியை ஏற்படுத்திய பாம்பு  Aug 18, 11
 
சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் அரசு பஸ் நேற்று மதியம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பஸ்சில் சிவஞான பிரகாசம் (50) என்ற பாம்பாட்டியும் பயணம் செய்தார். இவர் 6 பாம்பு கூடைகளை கண்டக்டருக்கு தெரியாமல் பஸ்சில் தனது “சீட்”டுக்கு கீழே வைத்து இருந்தார்.

3 கூடைகளில் நல்ல பாம்பும், 3 கூடைகளில் சாரை பாம்பும் இருந்தன. பாம்பு கூடைகள் ஒரு துணியால் சுற்றி கட்டி வைக்கப்பட்டிருந்தன. பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது. மாலை 3.30 மணியளவில் பஸ் மதுராந்தகத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பாம்பாட்டி தனது பாம்பு கூடைகளை சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். அப்போது சாரைப்பாம்பு இருந்த ஒரு கூடை திறந்து கிடந்தது. அதில் இருந்த பாம்பு கூடையில் இருந்து தப்பித்து வெளியேறி விட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே பாம்பாட்டி, நான் கூடையில் கொண்டு வந்த பாம்பு வெளியே வந்துவிட்டது என்று கூறினார். இதனால் பயணிகள் பயத்தில் அலறினார்கள். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பயணிகள் பீதியுடன் பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினார்கள். துணிச்சலான சிலர் பஸ்சுக்குள் பாம்பை தேடினார்கள். ஒரு பயணி வைத்திருந்த பையின் கீழே அந்த பாம்பு இருந்ததை கண்டுபிடித்தனர்.

பயணிகளே சேர்ந்து அதை அடித்துக் கொன்றனர். ஒருவர் செத்த பாம்பை ரோட்டின் அருகே வீசினார். மற்றொருவர் அங்கு கிடந்த குப்பைகளை குவித்து அதில் செத்த பாம்பை போட்டு தீ வைத்தார். பாம்பாட்டியின் கூடையில் இருந்து தப்பித்து பஸ்சில் வலம் வந்த பாம்பை கொன்ற பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பாம்பு தப்பித்து பயணிகளை மிரட்டிய சம்பவம் 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. பாம்பை கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்திய பாம்பாட்டியை கண்டக்டர் பஸ்சில் இருந்து கீழே இறக்கிவிட்டார்.

source : Maalai malar