Below article on Nagarathar houses is written by a writer called Arunagiri. Thanks to him. This is a very lengthy article. Take your time to read his experiences in going through the chettinad region. Especially when a non nagarathar writes about his views on our community it is much more fascinating. Please send comments to the author at writerarunagiri@gmail.com or to us - info @ nagarathargateway.com Thanks Editor Nagarathargateway.com பேரரசர்கள், மன்னர்கள் ஆட்சியைப் பற்றிப் பாடப்புத்தகங்களில், வரலாற்று ஆவணங்களில் படிக்கின்றோம். வட இந்தியாவில், இரண்டு கிலோ மீட்டர் நீளக் கோட்டைச் சுவருடன் கூடிய ஆக்ரா மற்றும் தில்லி செங்கோட்டைகள், ஜெய்பூர், உதய்பூர், குவாலியர், ஜான்சி, பரோடா எனப் பல நகரங்களில் கட்டப்பட்டு உள்ள பிரமாண்டமான கோட்டைகளைக் காண்கின்றோம். தமிழகத்தில், சேர, சோழ,பாண்டியர் என மூவேந்தர்கள் ஆண்டனர். அவர்கள் கட்டிய கோவில்கள், வெட்டிய குளங்கள், செதுக்கிய சிற்பங்கள், பொறித்த கல்வெட்டுகளைப் பார்க்கின்றோம். அவர்களைப் பற்றிய புறநானூற்றுப் பாடல்களைக் கேட்கின்றோம். ஆனால், அவர்கள் வாழ்ந்த வீடுகள் எங்கே? தடயமே இல்லையே? ஏன்? தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிய ராஜராஜன், தனக்காக ஒரு சிறு மாளிகையையாவது கட்டி இருக்க மாட்டானா? அந்த மாளிகை எங்கே? இந்தக் கேள்விகளை எழுப்பி, அதற்கான விடைகளைத் தேடியபோது கிடைத்த செய்திகள் வருத்தத்தை அளித்தன. ஆம்; பண்டைக்காலத்தில், ஒரு மன்னன் போரில் வெற்றி பெற்றால், தோற்றவருடைய வீட்டைத் தரைமட்டமாக இடித்துத் தகர்த்து, கழுதைகளைக் கொண்டு உழுது, எள் மற்றும் ஆமணக்குச் செடிகளை அங்கே நட்டு விடுவார்களாம். அதாவது, போரில் தோற்றவர் இவ்விதம் இழிவுபடுத்தப்படுகின்றார். அதற்குப் பிறகு அந்த இடத்தில் வேறு யாரும் குடியிருக்க மாட்டார்கள். இத்தகைய ஒரு வழக்கத்தால், தமிழகத்தில் அரிய பெரிய மாளிகைகள் பலவற்றை நாம் இழந்து விட்டோம் என்பது, வேதனைக்கு உரிய செய்தி அல்லவா? அந்த வேதனைக்கு இடையிலும் ஓர் ஆறுதல். ஆம்; அதே சோழவள நாட்டில் இருந்து கடல் கடந்து வணிகம் நடத்தி, செழிப்புற்று வாழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்து வணிகப் பெருமக்கள், ஆழிப்பேரலையின் சீற்றத்துக்கு அஞ்சி, அங்கிருந்து புலம் பெயர்ந்து வந்து, இன்றைய சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில், மேடான பகுதிகளைத் தேர்ந்து எடுத்துக் கட்டிய வீடுகள், தமிழ் மண்ணின் கட்டடக் கலையின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றன. செட்டிநாடு செட்டிநாடு. இது ஏதோ ஒரு தனி நாடு அல்ல. தமிழ்நாட்டுக்கு உள்ளே தனிப்புகழ் பெற்ற நாடு. சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியை மையமாகக் கொண்டு நகரத்தார் சமூகத்தினர் வசிக்கின்ற சுமார் 96 கிராமங்களை உள்ளடக்கியது செட்டிநாடு. பணி வாய்ப்புகளைப் பெற்று அயல்நாடுகளுக்குச் சென்று பலர் குடியேறி வருவதாலும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டாலும், தற்போது 75 கிராமங்களில் மட்டுமே நகரத்தார் சமூகத்தினர் வாழ்கின்றனர். இந்தப் பகுதியை, நாட்டுக்கோட்டை என்றும் அழைப்பது உண்டு. கடலுக்கு மேற்கு, பிரான் மலைக்குக் கிழக்கு, வைகைக்கு வடக்கு வெள்ளாற்றுக்குத் தெற்கு என்று ‘பாடுவார்’ முத்தப்பச் செட்டியார், செட்டிநாட்டு நிலப்பகுதியை வரையறுத்துக் கூறுகின்றார். நமது செட்டிநாட்டுக் கிராமங்களில் கட்டப்பட்டு உள்ள வீடுகளை, எத்தனை பேர் பார்த்து இருக்கின்றீர்கள்? 1994 ஆம் ஆண்டு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் கிராமச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, செட்டிநாட்டில் அமைந்து உள்ள நாட்டரசன்கோட்டை என்ற சிற்றூரில், ஒரு வீட்டில் இரண்டு இரவுகள் தங்கி இருக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டின் முன்பகுதியிலும், மாடியில் நாங்கள் தங்கி இருந்த பகுதியிலும்தான், விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தன. வீட்டின் உள்பகுதிக்குத் தனியாகப் போவதற்கே அச்சமாக இருக்கக்கூடிய அளவுக்கு, ஒவ்வொரு அறையும் பிரமாண்டமாக இருந்தது. பகல் முழுமையும் சுற்றுப்பயணம் என்பதால், விரிவாகப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து ஒருநாள் வைகோ அவர்கள் என்னிடம், “அயல்நாட்டு விருந்தினர் ஒருவர் வருகிறார்; அவருக்குப் பரிசாக அளிப்பதற்கு ஏதாவது ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி வாருங்கள்” என்றார். புத்தகக் கடைக்குச் சென்று தேடினேன். 'Chettiar Heritage’ என்ற அளவில் பெரிய ஆங்கிலப் புத்தகம் ஒன்று பளிச்செனக் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கத்திலும் பிரமாண்டமான வண்ணப்படங்கள். செட்டிநாட்டு வீடுகளின் கட்டட வேலைப்பாடுகள், அவர்கள் பயன்படுத்துகின்ற பொருள்கள், திருமண நிகழ்வுகள் என ஒவ்வொரு பக்கத்திலும் அவ்வளவு அழகான படங்கள்; எதிர்ப்பக்கத்தில் அந்தப் படத்திற்கான விளக்கங்கள் எனத் தெளிவாக இருந்தது. புத்தகத்தின் விலை ரூ.3000/-. உடனே அந்தப் புத்தகத்தை வாங்கினேன். வைகோ அவர்களிடம் கொண்டு வந்து காண்பித்தேன். புரட்டிப் பார்த்தவர், ‘இந்தப் புத்தகம், நமது இல்ல நூலகத்தில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய ஒன்று. எனவே, அவருக்குக் கொடுப்பதற்காக, இன்னொரு பிரதி வாங்கி வாருங்கள்’ என்றார்கள். 2004 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின்போது, வைகோ அவர்கள் சிவகங்கை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்ட ப.சிதம்பரம் அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்தபோது, கண்டனூரில் உள்ள தமது இல்லத்தில் வைகோவுக்கு சிதம்பரம் விருந்து அளித்தார். அப்போது, அவரது வீட்டின் ஒருசில பகுதிகளைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இதுதவிர, செட்டிநாடு பகுதியில் பயணங்கள் மேற்கொண்டபோதெல்லாம், பிரமாண்டமான வீடுகளை வெளியில் இருந்தவாறே பார்த்து ரசித்து இருக்கின்றேன். ஆனால், உள்ளே சென்று பார்த்தது இல்லை. எனவே, செட்டிநாடு வீடுகளைப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டு, 2010 நவம்பர் மாதம் 20 ஆம் நாள் காரைக்குடிக்குச் சென்றேன். சிங்கப்பூரில் பணி ஆற்றித் திரும்பிய தம்பி புதுவயல் சுப்பிரமணி, தற்போது, சாக்கோட்டை ஒன்றியக் கழகத்தின் செயலாளராக உள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்குத் திருச்சியில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்காக வந்தவர், தமது காரில் காரைக்குடிக்கு அழைத்துச் சென்றார். இராயவரம் சிதம்பரம் திருமயத்தைக் கடந்து, இராயவரம் என்ற செட்டிநாட்டுக் கிராமத்துக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது, இரவு 8 மணி ஆகி விட்டது. சென்னையில் எனது பக்கத்து வீட்டுக்காரர் திரு சித.ப.மு.சித.பழ.சிதம்பரம் அவர்களுடைய கிராமம் இது. சின்னஞ்சிறு கிராமம். சென்னையில் ஒருநாள், செட்டிநாடு வீடுகளைப் பற்றி அவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, ‘உங்கள் முன்னோர்கள், பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை எப்படிக் கொண்டு வந்தார்கள்?’ என்று கேட்டேன். ‘19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே, பர்மாவில் இருந்து தேக்கு மரங்களைக் கொண்டு வந்தனர். அப்போது, ரங்கூனுக்கும், தமிழகத்தின் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தொண்டி, மீமிசல் உள்ளிடட பல துறைமுகங்களுக்கும் கப்பல் போக்குவரத்து இருந்தது. அளவில் பெரிய தேக்குமரத் தடிகளை, சிறு கப்பல்களில் ஏற்ற முடியாது. எனவே, வெட்டப்பட்ட தேக்கு மரத் தடிகளைச் சங்கிலிகளால் பிணைத்து, கப்பலோடு சேர்த்துக் கட்டி விடுவார்கள். அவை கடல் நீரில் மிதந்து கொண்டே வரும். நாகப்பட்டினம் வந்து சேர பத்துப் பதினைந்து நாள்கள் ஆகும். அத்தனை நாள்களும் உப்புக்கடல் நீரில் மிதந்தாலும், தேக்குமரத் தடிகள் பாதிக்கப்படாது. பின்னர் அவற்றை, செட்டிநாட்டுக்குக் கொண்டு வந்து, வீடுகளைக் கட்டினார்கள்’ என்றார். தொடர்ந்து அவருடன் பேசியபோது கிடைத்த பல தகவல்கள், பெரும் வியப்பைத் தந்தது. ‘செட்டிநாட்டு வீடுகளைப் பார்க்க வேண்டும் என ஆவலாக இருக்கின்றது’ என்றேன். ‘நான் ஒவ்வொரு மாதமும் சில நாள்கள் எனது ஊருக்குச் சென்று தங்கி இருப்பேன். அப்போது, நீங்கள் வந்தால், எங்கள் வீட்டை நீங்கள் பார்க்கலாம். உறவினர் வீடுகளையும் காண்பிக்கிறேன்’ என்று சொல்லி இருந்தார். அவரது அழைப்பின்பேரில்தான் இராயவரம் கிராமத்துக்குச் சென்றேன். தெருக்களில் ஆங்காங்கு ஒன்றிரண்டு மின் விளக்குகளே எரிந்துகொண்டு இருந்தன. வெளிச்சம் மிகக் குறைவாகவே இருந்தது. வழியில் தென்பட்ட சிறுவர்களிடம் முகவரியைக் கூறி, சிதம்பரம் அவர்கள் வீட்டைக் கண்டுபிடித்தோம். அதற்கு முன்பே, செல்போன் வழியாக எங்கள் வருகையைத் தெரிவித்துக் கொண்டே இருந்ததால், வீட்டுக் கதவைத் திறந்து வைத்து, எதிர்பார்த்துக்கொண்டு நின்றார். அவரது வீட்டுக்குச் சென்றோம். தெருவை ஒட்டினாற் போன்று, ஒரு பெரிய கதவு. சுமார் ஏழெட்டுப்படிகள் ஏறினோம். செட்டிநாடு வீடுகள் அனைத்துமே, தரை மட்டத்தில் இருந்து, ஐந்து அடிகளுக்கும் மேலான உயரத்திலேயே கட்டப்பட்டு இருக்கின்றன. பூம்புகார் கடலுக்குள் அமிழ்ந்தபிறகு, அந்த இடத்தை விட்டு வந்தவர்கள் இவர்கள். எங்கே இந்தப் பகுதியிலும் கடல் அலைகள் வந்து புகுந்து மூழ்கடித்துவிடுமோ என்ற அச்சத்தால், அவர்கள் இவ்வாறு வீடுகளைச் சற்று உயர்த்தியே கட்டி இருக்கின்றார்கள் என்பதை முன்பே படித்து இருந்தது நினைவுக்கு வந்தது. சிதம்பரம் அவர்கள் வீட்டைச் சுற்றிக் காட்டினார். 1932 இல் கட்டப்பட்ட வீடு. முகப்பு பட்டாலை (திண்ணை) என அழைக்கப்படுகின்றது. வீட்டின் முன்பகுதி, அபரிமிதமான வேலைப்பாடுகளுடன், பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கின்றது. மேல் உத்திரத்திலும், தூண்களில் மேலும், ஆங்காங்கு ஈச்சங் கீற்றுகளைச் சொருகி வைத்து இருந்தார்கள். ‘ஏன்?’ என்று கேட்டேன். ‘பெரிய வீடாக இருப்பதால், அடிக்கடி ஒட்டடை நீக்கிப் பராமரிக்க முடியாது. எனவே, வெளவால்கள் எளிதாக வந்து குடியேறி விடும். அவை தாறுமாறாகப் பறக்கும். அப்போது, இந்த ஈச்சங் கீற்றுகளில் பட்டால், அவற்றின் இறக்கைகள் கிழிந்து விடும். அதற்குப் பயந்து, வெளவால்கள் வராது. அதற்காகத்தான் இந்த ஏற்பாடு’ என்றார். சிதம்பரம் அவர்கள் தொடர்ந்து, வீடு முழுவதும் அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். வெளிப் பட்டாலை, வளவு (முற்றம்) என அடுத்தடுத்த பகுதிகள் உள்ளன. தேக்குமரத்தால் ஆன பெரிய பெரிய கதவுகள், மர பீரோக்கள், பிரமாண்டமான இரும்புப் பெட்டகங்கள், நாற்காலிகள், ஊஞ்சல் என மரவேலைப்பாடு நிறைந்த பொருள்கள், வீட்டுக்கு அழகு சேர்க்கின்றன. ஆங்காங்கு உள்ள நிலைகளில், இராமாயண, மகாபாரதக் காட்சிகளை வரிசையாகச் செதுக்கி உள்ளனர். அவற்றுக்கு வெள்ளிமுலாம் பூசி, பளபளப்பாக வைத்து இருக்கின்றார்கள். ‘இந்த வேலைப்பாடுகளுக்காகவும், வெள்ளிக்காகவுமே, திருடர்கள் அவற்றை மட்டுமே தனியாகப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய் விடுகிறார்கள்’ என்றார். அவ்வளவு பெரிய வீட்டில், அன்றைக்கு அவரும், அவரது துணைவியார் என இருவர் மட்டும்தான் இருந்தார்கள். வீட்டில் பெரிய தேக்குமரக்கட்டில்கள் இருந்தாலும், இவர்கள் முன் அறையில், தரையில் பாய் விரித்துத்தான் படுக்கின்றார்கள். பிரம்பால் பின்னப்பட்டது; பெரப்பம் பாய் என்கிறார்கள். பராமரிப்பது எப்படி? ‘ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு நாம் வெள்ளை அடிப்பதுபோல, நீங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளை அடிக்கின்றீர்கள்?’ என்று கேட்டேன். நாங்கள் வெள்ளை அடிப்பதே கிடையாது. அதற்குத் தேவையும் இல்லை. இந்தச் சுவர்களைப் பாருங்கள், இன்றைக்கும் எவ்வளவு பளபளப்பாக இருக்கிறது என்று! முட்டையின் வெள்ளைக்கரு, கடுக்காய் மற்றும் பல உறுதியான கட்டுமானப் பொருள்களைச் சரிவிகிதத்தில் கலந்து கட்டிய சுவர் இது. பல்கலைக்கழகங்களில் கட்டுமானக் கல்வி படித்த பொறியாளர்கள் திட்டமிட்டுக் கட்டிய வீடு அல்ல. செட்டியாரும், கொத்தனாருமே சேர்ந்து கட்டிய வீடு இது. இந்தச் சுவர்களில், ஆங்காங்கு கண்ணுக்குத் தெரியாத மெல்லிய கீறல்கள் வேண்டுமானால் விட்டு இருக்கலாமே தவிர, சுவரின் காரை பெயர்ந்து விழுந்ததே இல்லை. புயல் மழை மற்றும் இயற்கைச் சீற்றங்களால் சில இடிபாடுகள் ஏற்படக்கூடும். நான் சிறுவனாக இருந்தபோது பெய்த பெருமழையில், இந்த வீடு முழுவதும் ஆங்காங்கே பல நாள்கள் தண்ணீர் தேங்கி நின்றது. எங்கள் வீடுகளின் மேற்கூரைகளில், ஓடுகளைத்தான் பொருத்தி இருக்கின்றோம். குரங்குகள் தாவிக் குதித்து ஓடி அவற்றை நொறுக்கி விடுவதும் உண்டு. அவற்றை மட்டும்தான் பழுது பார்ப்போம் என்றவர் தொடர்ந்து, தரையில் உள்ள கற்களைப் பாருங்கள். கருப்பு, வெள்ளை வண்ணத்தில் பதித்து இருக்கின்றார்கள். வாழ்க்கையில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே, இந்த இரு வண்ணங்களைப் பயன்படுத்தி இருக்கின்றார்கள்’ என்றார். பாகம் பிரிப்பது எப்படி? ‘எல்லாக் குடும்பங்களிலும், பாகப் பிரிவினைப் பிரச்சினைகள் உள்ளன. அதுபோன்ற பிரச்சினைகள் வரும்போது, எப்படிப் பாகம் பிரிக்கின்றீர்கள்?’ என்று கேட்டேன். ‘எங்கள் வீடுகளுக்கு இப்போது பட்டா தரவே மறுக்கின்றார்கள். ஏனென்றால், நில உச்சவரம்புச் சட்டத்தின்கீழ், ஒருவருக்கு இவ்வளவு இடம்தான் இருக்க வேண்டும் என்று உள்ளது. நில உச்ச வரம்பு சட்டத்தின்படி, ஒருவருக்கு 17 ஏர் வைத்துக் கொள்ளலாம். 1 ஏர் என்பது, 2.5 சென்ட். 100 ஏர், ஒரு ஹெக்டேர். 1 ஹெக்டேர் என்பது, 2.5 ஏக்கர். இந்த வீடு, ஏறத்தாழ ஒன்றேமுக்கால் ஏக்கர் பரப்பில் அமைந்து இருக்கின்றது. எங்களுடைய செட்டிநாட்டு வீடுகள் அந்த வரம்புக்கு உள்ளே வருவது இல்லை. பாகப்பிரிவினைப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், ஒரே வீட்டுத் திண்ணையில், உறவினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, பேசித் தீர்த்துக் கொள்வோம். எனவே, நாங்கள் பத்திர அலுவலகங்களுக்குச் சென்று பத்திரம் பதிவது இல்லை. எங்களுக்குள் உள்பத்திரம்தான் எழுதி வைத்துக் கொள்வோம். அதன்படி, ஒரு வீட்டின் தரைத்தளத்தில் உள்ள ஒரு அறை ஒருவருக்கு ஒதுக்கப்படும். அதற்கு நேராக மேலே மாடியில் உள்ள அறையை அவருக்குத் தர மாட்டோம். வேறு ஒருவருக்குத்தான் ஒதுக்குவோம். பாகம் பிரித்துக் கொண்டாலும், உறவுமுறை விட்டுப் போகக்கூடாது; ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அறைகள், சமையல் அறைகளில் மட்டும்தான் இந்தப் பிரிவினை. நடுமுற்றம் எல்லோருக்கும் பொதுவானது. ஒரே வீட்டுக்குள், என் அறைக்கு முன்புறம் உள்ள தாழ்வாரத்தின் வழியாக நடக்காதே என்கிற அளவுக்குப் பிரச்சினை முற்றிய வீடுகளும் உள்ளன. காரணம், ஒரே வீட்டில் பிறந்தவர்களுள் ஒருசிலர் நன்கு படித்து, அயல் நாடுகளுக்குச் சென்று புகழ் பெறுகின்றார்கள். அவர்கள் திரும்பி வரும்போது, உடன்பிறந்தவர்கள், இங்கே அதே நிலைமையில்தான் இருக்கின்றார்கள் என்றால், அங்கேதான் வருகின்றது பிரச்சினைகள். கையில் காசு இல்லை என்றால், சித்தப்பா, பெரியப்பா, அண்ணன், தம்பி என யாராக இருந்தாலும் ஒதுக்கி விடுவார்கள்; அல்லது, அவர்களாகவே ஒதுங்கிக் கொள்வார்கள். ஒரே வீட்டில், 1க்கு16 பேர், 1க்கு 32 பேர் வரையிலும் பங்காளிகள் உள்ளனர். ஆனால், அவர்களுள் ஒருவர் கூட இங்கே இல்லாமல், ஒட்டுமொத்த வீடும் பூட்டிக் கிடப்பதும் உண்டு. சென்னை, கோவை, டெல்லி மற்றும் அயல்நாடுகளில் உள்ளவர்கள், மாதத்துக்கு ஒருமுறை அல்லது வசதிக்கு ஏற்றபடி வந்து தங்கிச் செல்வர். ஒவ்வொருவரிடமும் ஒரு சாவி இருக்கும். இந்த வீட்டைச் சுற்றிலும் வெளிப்புறத்தில் அமைந்து உள்ள பகுதிகளைத் தனித்தனியாகப் பிரித்து, வாடகைக்கு விட்டு இருக்கின்றோம். நாங்கள் இங்கே இல்லாதபோது, அவர்கள்தாம், இந்த வீடுகளுக்குப் பாதுகாப்பு; எங்களுக்கும் ஒரு பாதுகாப்பு. பொருளாதாரப் பற்றாக்குறையால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிலர் வீடுகளை விற்றனர். சிலர் ஒட்டுமொத்தமாக வீட்டை விற்காமல், ஆங்காங்கு உள்ள ஒன்றிரண்டு மரக்கதவுகள், வேலைப்பாடுகள் மிக்க நிலைக்கதவுகளைப் பெயர்த்தும் விற்று உள்ளனர். ஆனால், 90களுக்குப் பிறகு, பெரும்பாலும் நகரத்தார்கள் யாரும் தங்கள் வீடுகளை விற்பது இல்லை. வங்கிகளில் கடன் வாங்குவதற்காகக் கூட, வீட்டுப் பத்திரங்களைக் கொடுக்க மாட்டோம். இன்றைக்கும், இங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் கூட்டுக்குடும்ப வாழ்க்கைதான்’ என்றார். அடுத்து, அவருடைய ஒன்று விட்ட தம்பி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இதுதான், எங்களுடைய பூர்வீக வீடு. இங்கிருந்து, என் தந்தையார் தனியாக வீடு கட்டிச் சென்றார். நாங்கள் இப்போது வசிப்பது, எங்களுடைய தனி வீடு. இருந்தாலும், இன்றைக்கும் இந்த வீட்டிலும் பங்கு இருக்கின்றது’ என்றார். அவருடைய உறவினர் தங்கையின் கணவரும், மகனும் அங்கே இருந்தார்கள். நாங்கள் ஊருக்குள் நுழைகின்றபோது அவர்களிடம்தான் வழி கேட்டு வந்தோம். அப்போது, அவர்கள் யாரோ வழிப்போக்கர்கள் என்று கருதினேன். ஆனால், இவ்வளவு பிரமாண்டமான வீட்டின் பங்காளிகள் என்பதே வியப்பாக இருந்தது. அந்த அளவுக்கு எளிமையாகவும் இருக்கின்றார்கள். அவருடன் பேசினேன். “என்னுடைய மூத்த மகன் மருத்துவர். தற்போது அரசுப்பணியில் உள்ளார். இரண்டாவது மகன், பொறியியல் படித்துக் கொண்டு இருக்கின்றான்’ என்றார். உடனே அந்த இளைஞன், ‘ஐ.ஏ.எஸ். ஆவதே என் விருப்பம்’ என்றார். அவருக்கு என் வாழ்த்துகளைச் சொன்னேன். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, ஒரு நூற்றாண்டுக்கால இந்திய அரசியலைத் தொகுத்து கட்சிகள் உருவான கதை என்ற நூலையும், 22 கிழக்கு ஆசிய நாடுகளின் வரலாறைத் தொகுத்து, கிழக்கின் கதை என்ற தலைப்பிலும் நான் நூலாக எழுதி இருப்பதைப் பற்றிச் சொன்னேன். தொடர்ந்து அவர்களுடைய கருத்துகள்: நகரத்தார்களைப் பொறுத்தவரையில், கையில் எத்தனைக் கோடிப் பணம், சொத்து இருந்தாலும், சும்மா இருக்க மாட்டார்கள். வயது வந்த ஆண்கள், முதலில் எங்கேயாவது சில ஆண்டுகள் வேலை பார்க்க வேண்டும். மாதம் 1000 ரூபாய் சம்பளத்துக்குக்கூட, உறவினர் வீடுகளில் வேலை பார்ப்பார்கள். தம்பி மகன், அண்ணன் வீட்டில் சம்பளத்துக்கு வேலை பார்ப்பார். இது எங்கள் நடைமுறை. எங்கள் சமூகத்தில் குடிப்பழக்கம் குறைவு. ஆனால், இந்தக் கால இளைஞர்கள் சிலரிடம் குடிப்பழக்கம் ஏற்பட்டு இருக்கின்றது. திருமணங்கள் நகரத்தார் திருமணங்கள் பெரும்பாலும் பெண் வீட்டில்தான் நடைபெறும். நாட்டுக்கோட்டை பகுதியில், நகரத்தார் சமூகத்துக்கு மையமாக உள்ள, இளையாத்தங்குடி, மாற்றூர், நேமங்கோவில், இரணியூர், பிள்ளையார்பட்டி, இலுப்பைக்குடி, சூரைக்குடி, வைரவன்கோவில், வேலங்குடி ஆகிய 9 கோவில்கள் புகழ் பெற்றவை. ஒவ்வொரு கோவிலையும் வணங்குபவர்கள் ஒரு பிரிவினர் ஆவர். கொள்வினை, கொடுப்பினைகள் எல்லாம், இந்தக் கோவில்களை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. ஒரு கோவிலில் சாமி கும்பிடுபவர்கள், பெரும்பாலும், சகோதர, சகோதரி என்ற உறவுமுறையைக் கொண்டு இருப்பார்கள். எனவே, அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த ஒன்பது கோவில்கள் தவிர, குலதெய்வ வழிபாடும் உண்டு. அப்படி 108 குல தெய்வங்கள் உள்ளன. வேறு சாதியில் கலப்புத்திருமணம் செய்தவர்களை, நகரத்தார் சமூகத்தில் இருந்தே ஒதுக்கி வைத்து விடுவோம். அப்படி, பல பெரிய மனிதர்களைக் கூட ஒதுக்கி வைத்து இருக்கின்றோம் என்றனர். திருமணங்களைப் பதிவு செய்கின்ற வழக்கத்தை, அண்மைக்காலமாக அரசு கட்டாயமாக ஆக்கி உள்ளது. ஆனால், நகரத்தார் சமூகத்தினர் நீண்ட நெடுங்காலமாகவே, இசைவுப் பிடிமானம் எழுதுதல் வாயிலாக, திருமணங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதைத் திருமண ஒப்பந்தம் என்றும் கூறலாம். உலகத்தின் பல பகுதிகளில் பரவி இருந்தாலும், திருமணங்களின்போது எல்லோரும் ஒன்றுகூடி, உண்டு உறங்கி மகிழ்ந்து இருப்பர். திருமண வைபவங்கள், பல நாள்கள் நடைபெறும். வகைவகையான விருந்துகள், ஏராளமான சடங்கு, சம்பிரதாயங்கள் உண்டு. கட்டடங்களுக்கு மட்டும் அல்ல, விருந்தோம்பலுக்கும், விதவிதமான, ருசியான உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது செட்டிநாடு. அந்தப் பெயரில் அமைந்து உள்ள உணவகங்கள், வாடிக்கையாளர்களை உடனடியாக ஈர்ப்பவை என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். எங்களது உரையாடல் தொடர்ந்தது: ‘எங்கள் சமூகத்தில், திருமணம் ஆன ஆடவர்களை, புள்ளி என்று அழைப்போம். அந்தந்த ஊர்ப் புள்ளிகளின் கணக்கு, அந்தந்த ஊர் நகரச் சிவன் கோவில்களில் உண்டு. அவர்களிடம் வரி வசூலிப்பது வழக்கம். எங்களுடைய பெயர்களில், பழனியப்பன் என்ற தந்தையின் பெயரின் முதல் இரண்டு எழுத்தை மட்டும் குறிப்பிட்டு ‘பழ’ என்று தமிழில் எழுதுவதை, ஆங்கிலத்தில், Pazha என்றோ, Pala என்றோ எழுத மாட்டோம். Pl என்றுதான் எழுதுவோம். அப்படி எழுதுவது, இப்போது பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றது. பாஸ்போர்ட் வழங்கும்போது, இதைப்பற்றி ரொம்ப விசாரித்துத் தொல்லை கொடுக்கின்றார்கள். அதனால், இப்போது சிலர் ஒரு எழுத்தை மட்டும் எழுதுகிறார்கள். சிலர் தந்தையின் பெயரையும் சேர்த்து முழுமையாக எழுதுகிறார்கள்’ என்றனர். இப்படி அரிய தகவல்கள் பலவற்றை, அவர்களே சொல்லக் கேட்டதில், பெருமையாக இருந்தது. அவர்களுக்கு நன்றி கூறி, விடைபெற்றோம். அவர்களுக்கு, என்னுடைய கொடிவழி நூலை அன்பளிப்பாகக் கொடுத்தபோது, திரு சிதம்பரம் அவர்கள், 1993 ஆம் ஆண்டு தாமே வடிவமைத்த, கொடிவழி வரைபடத்தை எடுத்துக் காண்பித்தார். இரவு காரைக்குடியில் தங்கி, மறுநாளும் பல வீடுகளைப் பார்வையிட்டோம். ஆயிரம் ஜன்னல் வீடு காரைக்குடியில் ஒரே வீட்டில், ஆயிரம் ஜன்னல்கள் உள்ளன என்பதைப் பற்றிப் படித்து இருக்கின்றேன். காலையில் நேராக அந்த வீட்டுக்குச் சென்றோம். வீட்டின் முன்பகுதியை மட்டும் திறந்து வைத்து இருக்கின்றார்கள். அந்தப் பகுதியில் ஓரிருவர் இருந்தனர். முன்பின் அறிமுகம் இல்லாத அவர்களிடம் சென்று, வீடு முழுவதும் சுற்றிக் காண்பியுங்கள் என்று கேட்க முடியாது. எனவே, தயக்கத்தோடுதான் அவர்களை அணுகினோம். “இந்த வீட்டைப் பார்ப்பதற்காக நிறையப் பேர் வருகின்றார்கள். நாங்கள் வயதானவர்கள். வீடு முழுவதும் சுற்றிக் காண்பிக்க முடியாது. ஆயினும், வருகின்றவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக, உரிமையாளர்கள், இந்த முன்பகுதியை மட்டும் காண்பிக்கும்படிக் கூறி உள்ளார்கள். நீங்கள் இந்தப் பகுதிகளைப் பாருங்கள். போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்கள். அந்த முன்பகுதித் திண்ணையே அவ்வளவு அழகு. தரைத்தளத்தில் வெள்ளையும், கருப்புமான சதுரக் கற்கள். தவிர, வெவ்வேறு வண்ணங்களிலான கற்கள், சுவரில்ஒட்டப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தூணும், பிரமாண்டமான பச்சைக் கல் தூண்கள். இத்தாலி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாம். பெல்ஜியம் நாட்டு விளக்குகள் அழகுக்கு அழகு சேர்த்தன. ஐம்பது அடி நீளம், ஒரே மரத்தாலான பெஞ்சுகள் உள்ளன. அதை இன்றைக்கு எடுத்து நகர்த்தி வைக்கப் பத்துப் பதினைந்து பேர் தேவை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். உள்ளே சென்று முழுமையாகப் பார்க்க இயலாவிட்டாலும், முன்பகுதியையாவது சுற்றிக் காண்பித்த அந்தப் பெரியவர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றோம். காரைக்குடி வீதிகளில் சென்றபோது, ஒவ்வொரு வீட்டிலும், ஏராளமான எண்கள் எழுதப்பட்டு இருந்தன. என்னவென்று கேட்டேன். அவை எல்லாம் மின் பயனீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள எண்கள் என்றார்கள். தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியிலும், இந்த அளவுக்குப் பெரிதாக எழுதி வைக்கவில்லை. இதேபோல, எல்லா வீடுகளிலும் எழுதி வைப்பது நலம். ப.சு.இராம.அ.இராமசாமி பகர்ந்தவை அடுத்து, காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் செயலாளர், திரு ப.சு.இராம.அ.இராமசாமி அவர்களைச் சந்தித்தேன். அன்போடு வரவேற்றார். இவரது வீடு, புதிதாக இருந்தது. ஆனால், நகரத்தாரின் பழைய வீடுகளைப் போன்ற அதே வடிவமைப்பில் அமைந்து இருந்தது. அதைப் பற்றிக் கேட்டேன். ‘ஆம்; இந்த வீட்டை நானே வடிவமைத்துக் கட்டினேன். இதைக் கட்டி, 15 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் 100 அடி சேர்த்துக் கட்ட விரும்பினேன். ஆனால், எங்கள் வீட்டு ஆச்சி ஒத்துக் கொள்ளவில்லை. இதையே கூட்டிப் பெருக்க ஆள் இல்லை. எங்கள் வீட்டு வேலைக்காரி, நாங்கள் நாள்தோறும் புழங்குகின்ற பகுதிகளை மட்டும்தான் கூட்டுவேன் என்கிறாள். இத்தனைக்கும் மற்ற வீடுகளில் கொடுக்கின்ற சம்பளத்தை விட, 200, 300 கூடுதலாகத்தான் கொடுக்கின்றோம். மேலும், இப்போதெல்லாம் அவர்கள், நின்றுகொண்டேதான் வேலை செய்கின்றார்கள். எங்கள் வீட்டு ஆச்சி, வேலைக்காரி குனிந்து, வளைந்து கூட்டிப் பெருக்க வேண்டும் என்கிறார்கள். இப்படி இந்த வீடுகளைப் பராமரிப்பதில், எத்தனையோ பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, பல அறைகளைப் பூட்டியே வைத்து இருக்கின்றோம். நாங்கள் வசிக்கின்ற இந்த மெய்யப்பன் (அம்பலம்) தெருவில், கடந்த 100 ஆண்டுகளாக யாரும் பத்திரம் போடவில்லை. (அதாவது, யாரும் வீட்டை விற்கவோ, வாங்கவோ இல்லை என்பதைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார்.) இந்தத் தெருவில் உள்ள அத்தனை வீடுகளும், நகரத்தார் வீடுகளே. ஒரேயொரு அம்பலத்தார் வீடு இருக்கின்றது. அவர்களும், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே வசித்து வருகின்றார்கள் என்று அவர் சொன்னபோது, வியப்பாக இருந்தது. என்னுடைய கொடிவழி என்ற நூலை அன்பளிப்பாகக் கொடுத்தேன். மேலும் தொடர்ந்தார். நீங்கள் கொடிவழி என்று எழுதி இருக்கின்றீர்கள். தமிழகத்திலேயே, தங்கள் குடும்பக் கொடிவழியை மறவாமல், பல தலைமுறை முன்னோர்களின் பெயர்களின் முதல் எழுத்துகளைத் தங்கள் பெயரோடு இணைத்துக்கொண்டு எழுதுபவர்கள் நகரத்தார்களே. ஒருவரை அழைக்கும்போது முழுப்பெயரையும் விளிப்பது இல்லை. பெயரின் முதல் எழுத்தை மட்டும் குறிப்பிட்டு, ‘ப’ னா, ‘சி’ னா, சீ னா தா னா’ என்றுதான் அழைப்போம். தமிழகத்தில் இருந்து தொடக்கத்தில் அயல்நாடுகளுக்குச் சென்றவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்களே. எங்கள் முன்னோர்கள் பல நாடுகளுக்குச் சென்றார்கள். இலங்கையில், கண்டி முருகன் கோவிலைச் சுற்றிலும், நகரத்தார்களின் வட்டிக்கடைகள்தாம் இருந்தன. இன்றைக்கும் மலேசியாவில் நான் வணிகம் செய்து வருகிறேன். சொத்துகள் உள்ளன. எனவே, பாதி நாள்கள் அங்கேதான் இருப்பேன். கோலாலம்பூர், பினாங்கு ஆகிய நகரங்களில் நகரத்தார் விடுதிகள் உள்ளன. இன்றைக்கு சிங்கப்பூரில் உள்ள நகரத்தார்கள் நிறையப் பேர் சீனப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்குத்தான், அங்கே அமைச்சர் பொறுப்புகளை வழங்குவார்கள். நன்றாகக் கவனித்துப் பாருங்கள், சிங்கப்பூர் தமிழ் அமைச்சர்கள், பெரும்பாலும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களாகத்தான் இருப்பார்கள். இப்போது சிங்கப்பூர் நிதி அமைச்சராக உள்ள தர்மன் சண்முகரத்தினம் ஒரு நகரத்தார்தான். இந்தியாவின் முதலாவது நிதி அமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டியாரும் ஒரு நகரத்தாரே. வட்டித்தொழிலில் வருமானம் ஈட்டினாலும், எங்கள் முன்னோர்கள் கொடை வள்ளல்களாகவும் திகழ்ந்தார்கள். எங்கள் பகுதியில், பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் கட்டுவதற்கு, தங்களுடைய நிலங்களைக் கொடையாக அளித்தார்கள். காரைக்குடியில் அழகப்பச் செட்டியார் அவர்களுடைய முயற்சியாலும், கொடையாலும், அழகப்பா பல்கலைக்கழகம் உருவாயிற்று. இந்திய விடுதலைக்கு முன்பே சிதம்பரத்தில் அமைந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகம், இன்றைக்கு அனைத்து இந்தியாவிலும் மாணவர்களிடையே அறிமுகமான பெயராகப் புகழ் பெற்று உள்ளது. ஏன், உலக அளவிலும் பெயர் பெற்று உள்ளது. காரைக்குடியில் அமைந்து உள்ள பல சங்கங்கள், நூற்றாண்டை நெருங்கிக் கொண்டு இருக்கின்றன. மகாகவி பாரதி அவர்கள், எங்களுடைய இந்து மதாபிமான சங்கத்துக்கு வருகை தந்து உள்ளார். அவர், தம் வாழ்நாளிலேயே ஐந்து படங்கள்தாம் எடுத்துக் கொண்டார். அவற்றுள் மூன்று படங்கள், எங்கள் இந்து மதாபிமான சங்கத்துக்கு அவர் வருகை தந்தபோது எடுக்கப்பட்டவைதான். அந்தப் படங்கள், எங்கள் சங்கத்தில் உள்ளன. அங்கே ஒரு நூலகமும் உள்ளது. 1917 ஆம் ஆண்டு இந்தச் சங்கம் அமைக்கப்பட்டது. நீங்கள் பாருங்கள் என்று கூறி, தமது உதவியாளரை உடன் அனுப்பினார். அவருக்கு நன்றி கூறி விடை பெற்றோம். இந்து மதாபிமான சங்கத்துக்குச் சென்று, படங்களையும், நூல்களையும் பார்வையிட்டோம். கடியாபட்டி செட்டிநாடு பகுதியில் உள்ள பல வீடுகளை, இப்போது விடுதிகளாக மாற்றத் தொடங்கி இருக்கின்றார்கள். அப்படி மாற்றப்பட்ட ஒரு வீட்டைப் பார்ப்பதற்காக, கடியாபட்டி என்ற கிராமத்துக்குச் சென்றோம். திருச்சி பேருந்து நிலையம் அருகே அமைந்து உள்ள பிரபல சங்கம் ஓட்டல்காரர்கள், இந்த வீட்டைத் தேர்வு செய்து, மூன்று நட்சத்திர விடுதியாக மாற்றி அமைத்து இருக்கின்றார்கள். இந்த வீட்டின் உரிமையாளர்களிடம் இருந்து 30 ஆண்டுக்காலக் குத்தகைக்கு எடுத்து உள்ளார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக வீட்டைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று நிறைவுக் கட்டத்தை எட்டி உள்ளன. சுமார் 15 கோடி செலவில் இந்த வீடு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அயல்நாட்டுப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில், தேவையான அனைத்து வசதிகளையும் செய்து இருக்கின்றார்கள். வீட்டுக்கு உள்ளே ஒருபுறத்தில், புதிய நீச்சல் குளத்தைக் கட்டி இருக்கின்றார்கள். இந்த வீட்டுக்கு ஐந்து நட்சத்திர விடுதி என்ற தகுதிகூடத் தரலாம். ஆனால், ஒரு ஐந்து நட்சத்திர விடுதி என்பது, ஏதாவது ஒரு விமான நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்குள் அமைந்து இருக்க வேண்டுமாம். கடியாபட்டிக்கு அருகில் உள்ள விமான நிலையம், திருச்சி அல்லது மதுரைதான். இரண்டுமே சுமார் 100 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளதால், ஐந்து நட்சத்திர விடுதி என்ற தகுதியைப் பெற முடியவில்லை. ஆனால், அதற்கு உரிய வசதிகள் அனைத்தும் உள்ளன. (படங்கள்). அங்கே இருந்த பொறுப்பாளர், விடுதி முழுமையும் சுற்றிக் காண்பித்து, விளக்கங்களை அளித்தார். முழுமையாகச் சுற்றிவர இரண்டு மணி நேரம் ஆயிற்று. ஒவ்வொரு தமிழனும் பார்த்துப் பெருமைப்பட வேண்டிய விடுதி இது. நீங்களும் போய்ப் பாருங்கள். கானாடுகாத்தான் அடுத்து, ‘நகரத்தார்களின் அரசர்’ என்று அழைக்கப்படுகின்ற, இராஜா சர் எம்.ஏ.எம். இராமசாமி அவர்களுடைய இல்லத்தைக் காண, கானாடுகாத்தான் கிராமத்துக்குச் சென்றோம். அவரது இல்லத்தை, நகரத்தார்கள் அரண்மனை என்றுதான் அழைக்கின்றார்கள். வைகோ அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தை, இந்த வீட்டில் எடுப்பதற்கு இராஜா அவர்கள் அனுமதி அளித்தார்கள். அந்தப் படத்தில், இந்த வீட்டின் உள் அமைப்பை நீங்கள் பார்க்கலாம். அதற்குப் பிறகு, பல படங்களில், இந்த அரண்மனை இடம் பெற்று உள்ளது. ஜீன்ஸ் (கானாடுகாத்தான், பள்ளத்தூர்), சின்ன ஜமீன், ராஜகுமாரன், அரண்மனைக் கிளி, சாமி, சிங்கம், பெரியார், தவமாய் தவமிருந்து, வேங்கை, திருப்பதி, திருப்பாச்சி ஆகிய படங்களில் செட்டிநாட்டு வீடுகளில் காட்சிகளை அமைத்து இருக்கின்றார்கள். இன்றைய இளம் இயக்குநர்கள் பலர், செட்டிநாட்டு வீடுகளில் படம் பிடிப்பதை விரும்புகின்றார்கள். பிரிவோம் சந்திப்போம் திரைப்படம், பெரும்பகுதி கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டில்தான் படமாக்கப்பட்டு உள்ளது. கானாடுகாத்தான் அரண்மனையில், நடு முற்றத்தைச் சுற்றிலும் உள்ள மேற்கூரையில், நான்கரை லட்சம் குறு ஓடுகள் பதிக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு இடையில் மழைநீர் ஒழுகல் ஏற்பட்டதால், அத்தனை ஓடுகளையும் அகற்றிவிட்டு, உடைந்து போன சுமார் ஒரு இலட்சம் ஓடுகளைப் புதுப்பித்து, மீண்டும் பொருத்தி இருக்கிறார்கள். இந்தப் பணிகள் நிறைவுபெற ஆறு மாதங்களும், 35 லட்ச ரூபாய் செலவும் ஆயிற்றாம். ஓடு மாற்றவே இவ்வளவு செலவு என்றால், ஒட்டுமொத்தமாக இந்த வீட்டைப் பராமரிப்பதற்கு எவ்வளவு ஆகும்? என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். செட்டிநாடு வீடுகளுக்கான ஓடுகளைத் தயாரிப்பதற்காகவே, இந்தப் பகுதியில் சூளைகள் இயங்கி வருகின்றன. அரண்மனையின் வரவேற்பு அறையில் உள்ள உள்ள இராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களுடைய ஓவியத்தை நீங்கள் எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும், அவரது கண்கள் நம்மையே உற்றுப் பார்ப்பது போலவும், கால்களில் அணிந்து உள்ள ஷூக்கள், எந்தப் பக்கம் நாம் திரும்பினாலும், அதே பக்கத்துக்குத் திரும்புவது போலவும் அற்புதமாக வரைந்து இருக்கின்றார்கள். இந்தத் தகவலை அங்கே உள்ள பொறுப்பாளர் விளக்கிச் சொன்னபோது, குறுக்கும் நெடுக்குமாக நடந்து பார்த்தேன். அவர் சொன்னது புரிந்தது. இந்த அரண்மனை மட்டும் அல்ல, சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில், அடையாறு ஆற்றங்கரையில் பிரமாண்டமாகவும், கலை அழகோடும் கட்டப்பட்டு உள்ள செட்டிநாடு அரண்மனை, சென்னை மாநகரில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பெருமையைப் பறைசாற்றுகின்றது. நாட்டுக்கோட்டைக்கு உடனடியாகச் சென்று பார்க்க இயலாத சென்னைவாசிகள், இந்த வீட்டைப் பார்க்கலாம். ஆர்க்காடு இளவரசர் வசிக்கின்ற இராயப்பேட்டை அமீர் மகால் தவிர, சென்னையில் இந்த அளவு பெரிய மாளிகை வேறு ஏதேனும் இருக்கின்றதா என்பது தெரியவில்லை. பதிவுகள் செட்டிநாட்டின் பெருமைகள் அனைத்தையும் ஒரே கட்டுரையில் எழுதிவிட முடியாது. மேலும், செட்டிநாடு வீடுகள் குறித்தும், நகரத்தார் சமூகம் குறித்தும் நான் எழுதித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. நகரத்தார்கள், தமிழகத்தில் சிறந்த கல்விமான்களாகவும், முன்னணிப் பதிப்பாளர்களாகவும் திகழ்கின்றார்கள். அவர்களே நிறைய புத்தகங்களை வெளியிட்டு இருக்கின்றார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஏராளமான சிற்றிதழ்களை வெளியிட்டு உள்ளனர். அப்படி ஒரு பட்டியலே உள்ளது. என் கையில் கிடைத்த தகவல்: 1. நகரத்தார் கலைக்களஞ்சியம்: தொகுப்பும், வெளியீடும், மணிவாசகர் பதிப்பகம். 450 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை, ரூ. 275. 2. செட்டிநாடும், செந்தமிழும் - வானதி பதிப்பகம் வெளியீடு 3. செட்டிநாடு: அறமும், பணியும். - காரைக்குடியைச் சேர்ந்த பேராசிரியை வள்ளியம்மை எழுதியது. 4. நகரத்தார் பண்பாடு: மணிவாசகர் பதிப்பகம் 5. பள்ளத்தூரைச் சேர்ந்த பழ. அண்ணாமலை தொகுத்து வெளியிட்டு உள்ள, 5. நகரத்தார் திருமண நடைமுறை 6. செட்டிநாடு ஊரும், பேரும், 7. நகரத்தார் கணக்கியல் முறை, 8. நகரத்தார் யார்? எவர்?-முதல் தொகுதி, 9. நகரத்தார் பண்பாடும், பழக்கங்களும், 10. நீத்தார் கடன் இன்னும் எவ்வளவோ உள்ளன. இவர்களுடைய ஒவ்வொரு திருமண அழைப்பிதழும், ஒரு மிகப்பெரிய பதிவுதான். ஒருமுறை வைகோ அவர்கள் இல்லத்துக்கு வந்த, 100க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஒரு திருமண அழைப்பிதழை நான் பார்த்து இருக்கின்றேன். திருமண அழைப்பிதழுடன் தேவாரம், திருவாசப் பாடல்களையும் சேர்த்து, ஒரு புத்தகமாகவே அச்சிடுகின்றார்கள். செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு பலர் முனைவர் பட்டங்களைப் பெற்று உள்ளார்கள். யூதர்கள், குஜராத்தியர்களுக்கு இணையாக, உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வணிக சமூகமாக, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் புகழ் பெற்று உள்ளனர். இவர்களுடைய பத்திரங்கள், கணக்கு வழக்கு முறைகளைப் பார்த்து, ஆங்கிலேயர்களே வியந்து பாராட்டி உள்ளனர். தங்களது வரலாறு குறித்த விரிவான தகவல்களை, நூல்களாகவும், குறும்பட ஆவணங்களாகவும் தொகுத்து வெளியிட்டு இருக்கின்றார்கள். அயல்நாடுகளுக்குச் சென்றவர்கள், பர்மா, வியட்நாம் உள்ளிட்ட பல மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து, தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றி உள்ளனர். செட்டிநாட்டுப் பெருமக்கள் செட்டிநாடு பயணத்தின்போது, கோட்டையூர் என்ற கிராமத்தின் வழியாகச் சென்றேன். இதுதான், தமிழ்ப் பயண நூல் எழுத்தாளர்களிடையே தனிப்புகழைப் பெற்ற ஏ.கே. செட்டியார் பிறந்த ஊர். இதே ஊரைச் சேர்ந்த ரோஜா முத்தையா அவர்கள் சேகரித்து வைத்து இருந்த சுமார் 10,000க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டுதான், சென்னை தரமணியில், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் அமைக்கப்பட்டது. ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் காரைக்குடியில் உருவாக்கிய ஏ.வி.எம். திரைப்பட நிறுவனம், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களை பல மொழிகளில் உருவாக்கி, இந்தியா முழுமையும் புகழ் பெற்றுத் திகழ்கின்றது. கருமுத்து தியாகராஜ செட்டியார், மதுரை வங்கியையும், தியாகராஜர் நூற்பு ஆலை, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல நிறுவனங்களை உருவாக்கினார். அண்ணாமலை மற்றும் இராமசாமி செட்டியார் இணைந்து இந்தியன் வங்கியை (1907) உருவாக்கினர். எம்.சிடி.எம். சிதம்பரம் செட்டியார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை (1937) நிறுவினார். கவியரசு கண்ணதாசனின் சிறப்பை நீங்கள் அறிவீர்கள். இப்படி எத்தனையோ பெருமக்கள், செட்டி நாட்டின் தனித்திறமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர். நெற்குப்பை சோம. லெ. நகரத்தார் இயல் ஆய்வாளர். பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்து பயண நூல்களை எழுதி உள்ளார். தமிழகத்தின் 10 மாவட்டங்களைப் பற்றி இவர் எழுதி உள்ள நூல்கள், கலைக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. பண்டிதமணி கதிரேசன் செட்டியார், குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, காரைக்கடி கம்பன் கழக நிறுவனர் சா. கணேசன் (கம்பன் அடிப்பொடி), கல்கண்டு நிறுவனர் தமிழ்வாணன், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, தமிழ் அறிஞர் ச.மெய்யப்பன் (மணிவாசகர் பதிப்பகம்) ஆய்வாளர் பேராசிரியர் ஆறு. அழகப்பன் இவர்கள் எல்லாம் நாட்டுக்கோட்டை நகரத்தார்களே! தமிழரின் கடமை தமிழகத்தின் பாரம்பரியக் கட்டடக் கலையைப் பாருக்குப் பறைசாற்றும் செட்டிநாட்டு வீடுகளைப் பாதுகாப்பதும், கேரளத்துச் சகோதரர்கள் ஐயப்பன் கோவிலுக்கு ஐரோப்பிய வெள்ளையர்களை இருமுடி கட்ட வைத்து அழைத்து வந்து காட்டுவது போல், உலகின் அனைத்து நாட்டவர்களையும் செட்டிநாட்டுக்கு அழைத்து வந்து வீடுகளைக் காண்பித்துப் பெருமை கொள்ள வேண்டியதும், முடிந்தால் அதுபோன்ற வடிவமைப்பிலான வீடுகளைச் சிறிய அளவில் தமிழகம் முழுவதும் கட்டுவதும், ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும்! - அருணகிரி
writerarunagiri@gmail.com
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
|