Author:முனைவர் மு. பழனியப்பன்
இவர்களின் குலத்தில் குடும்பப் பெயர்கள் மிகவும் எளிமையான
கட்டமைப்புடையது. காரண காரியம் மிக்கது. ஒரே அமைப்புடையது. அவற்றில் சில பெயர்கள்
இங்குக் காட்டப் பெற்று அவற்றின் பொதுமைகள் ஆராயப் பெறுகின்றன.
தந்தை-
அப்பச்சி எனவும், தாய்- ஆத்தாள் எனவும் அழைக்கப் பெறுகின்றனர். மகன், மகள்
பெயர்களில் மாற்றம் இல்லை. மகனின் மனைவி- மகம்மிண்டி(மகன் பெண்டிர்) என
அழைக்கப்பெறுகிறாள். பெண்டிர் என்ற சொல் பெண் பெயர்களுக்கான பின்ஒட்டு ஆகும்.
பெண்டிர் என்றால் பெண் எனப் பொருள்படும். இச்சொல் மரியாதைப் பன்மை கலந்த
சொல்லாகும். எனவே பெண்களை மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இக்குலத்தாரிடம் உள்ளது
என்பதை உணர முடிகின்றது. மகளின் கணவர்- மாப்பிள்ளை/ மருமகன் எனப்படுகின்றார். இவை
போல பின்வரும் பெயர்களும் காணத்தக்கன.
அண்ணன்- அண்ணன், அண்ணன் மனைவி-
அண்ணமிண்டி(அண்ணன் பெண்டிர்), தம்பி- தம்பி, தம்பி மனைவி- தம்பியொண்டி(தம்பி
பெண்டிர்), பேரன்-பேரன், பேரன் மனைவி- பேரம்பிண்டி(பேரன்பெண்டிர்), மாமா-அம்மான்,
மாமா மனைவி- அம்மாம்மிண்டி(அம்மான் பெண்டிர்), அத்தை-அயித்தை, அத்தை மகள்-
அயித்தியாண்டி( அத்தையாள்பெண்டிர்), கணவனின் தம்பி,அண்ணன் ஆகியோர்-கொழுந்தனார்-
கொழுந்தனாவண்டி(கொழுந்தனார் பெண்டிர்) என்பன ஒரே அமைப்பிலானது. இவற்றில் பெண்டிர்
என்ற சொல் அதன் முன்சொல்லுக்கு ஏற்றார் போல், மிண்டி, யாண்டி, யொண்டி, மிண்டி ஆகிய
ஈறுகளாகப் பேச்சு வழக்கில் திரிந்துள்ளமை கவனிக்கத்தக்கது.
இன்னும் சில
குடும்பப் பெயர்கள் வேறு அமைப்பில் உள்ளன. அம்மாவைப் பெற்ற அம்மா- ஆயா எனவும்,
அப்பாவைப் பெற்ற அம்மா- அப்பத்தா (அப்பனைப் பெற்ற ஆத்தாள்) எனவும் அழைக்கப்
பெறுகின்றனர். அப்பா, அம்மா இருவரையும் பெற்ற தாத்தா- ஐயா என்றே பொதுப் பெயரால்
அழைக்கப் பெறுகிறார்.
மாமானார்-சம்பந்தியான், மாமியார்-சம்பந்தியாள் என்பன
எதிர் உறவு முறையினரைக் குறிக்கும் பெயர்களாகும். இவை தவிர மற்றொரு பெண்ணின்
கணவனைக் குறிக்கையில் ஆம்பிடையான் என்ற சொல் கொண்டு குறிப்பிடுவதும்
உண்டு.
கணவனும், மனைவியும் -ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கையில் ஏங்கறேன்
என்ற பேச்சு வழக்கு நகரத்தார் மரபில் காணப்படுகிறது. ஏன் என்கிறேன் என்ற சொல்லின்
திரிபாக இதனைக் கொள்ளலாம்.
மகனுக்கு அவனின்
தந்தை வழி தாத்தா (ஐயா) பெயரிடப்படுகையில், அதனை அவனின் அம்மா (ஆத்தாள் ) அழைப்பது
மரியாதைக் குறைவு எனக் கருதி நகரத்தார் பெண்கள் அழைப்பதில்லை. மாறாக தம்பி என்றோ,
வேறு ஒரு பெயர் கொண்டோ அழைப்பது முறைமையாக உள்ளது. அது போலவே அப்பத்தா பெயரை
மகளுக்கு இடுகையில் அதனை அழைப்பதும் மரியாதைக் குறைவு என்பதால் வேறு பெயர் கொண்டோ
அல்லது ஆத்தாள் என்றோ அழைப்பதும் முறைமையாகும்.
இதே போல இரண்டாவது மகன்,
மகள் பிறக்கையில் மாமானார், மாமியார் பெயர் சூட்டப்படுகையில் அதனை அழைப்பது
மரியாதைக் குறைவு எனக் கருதுவதால் கணவனும் வேறு பெயர் இட்டு அழைப்பதும் வழக்காக
உள்ளது. எனவே நகரத்தார் குல எல்லாப் பிள்ளைகளுக்கும் இரு பெயர்கள் இருப்பது
தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இவ்விரு பெயர்களும் திருமண அழைப்பிதழ் முதலாக
பதிவு பெற வேண்டிய இடங்களில் பதியப் பெறுகின்றன என்பது குறிக்கத்
தக்கது.
அண்ணன் என்ற சொல் நகரத்தார் மக்களிடையே பேச்சு வழக்கில் அதிகம்
பயன்படும் சொல்லாகும். வயதில் மூத்த ஆண்களை அண்ணன் என்பது பொது வழக்காகும். வயதில்
குறைந்த ஆண்களை தம்பி என்றழைப்பதும் பொதுவழக்காகும். வயதில் மூத்த பெண் பிள்ளைகளை
ஆச்சி என அழைப்பதும், வயதில் குறைந்த பெண் பிள்ளைகளை தங்கச்சி என்றழைப்பதும் பொது
வழக்கிற்கு உட்பட்டதே ஆகும். இவ்வழக்குகள் செட்டிநாட்டுப் பகுதிகளில் வாழும் பிற
இனத்தாரிடத்திலும் காணப் பெறுகின்றன.
மனைவியுடன் பிறந்த ஆண்- மச்சான்,
மைத்துனன் என அழைக்கப்படுவதும், கணவனுடன் பிறந்த பெண்கள் நாத்தனார் எனப்படுவதும்,
பிற குலத்தினரால் அழைக்கப்பெறும் பான்மைதான்.
மேலும் முறையினர் பலராக
இருக்கும் போது அவர்களை வயது அடிப்படையில் பெரிய, சிறிய என்ற அடைகளுடன் அழைக்கும்
முறை இவர்களிடம் காணப் பெறுகின்றது. எடுத்துக்காட்டிற்காக சின்ன (சிறிய) ஆயா, பெரிய
ஆயா; சின்ன ஆத்தாள், பெரிய ஆத்தாள் முதலியனவற்றைக் காட்டலாம்.
தூரத்து உறவினர் பங்காளிகள் எனப்படுகின்றனர். இவர்களுள் சில வகைகள்
உண்டு. அவை பங்காளிகள், கோயில் பங்காளிகள், ஊர் பங்காளிகள், கூடிக் கொள்கின்ற
பங்காளிகள் என்பனவாகும்.
பங்காளிகள் என்போர் தந்தை வழியில் உறவு முறையினர் ஆவர். இவர்கள்
திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சிகளிலும், இறப்பு முதலான துயர நிகழ்ச்சிகளிலும்
முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் இன்றி எந்நிகழ்வும் இக்குல முறையினரிடம்
நடைபெறாது என்பது குறிப்பிடத் தக்கது.
கோயில் பங்காளிகள் என்போர் கோயில் உறவால் உறவினர் ஆவோர் ஆவர்.
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் சார்ந்த குடிகள் ஆவர். இவர்கள் ஒன்பது நகரக்
கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவனர் ஆவர். அவை இளையாற்றங்குடி, மாற்றூர்,
நேமம், இரணியூர், பிள்ளையார்பட்டி, இலுப்பைக்குடி, சூரைக்குடி, வைரவன் கோயில்,
வேலங்குடி என்பனவாகும். இச்சிவன் கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவாகியுள்ள
இக்குலத்தார், இவர்களுக்கான பூர்வீக ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். பல ஊரினர்
ஆனாலும் கோயில் அடிப்படையில் இவர்களிடத்தில் உறவு உண்டு. இவ்வுறவே கோயில்
பங்காளிகள் என்னும் உறவாகின்றது.
புள்ளி என்ற இச்சொல் நகரத்தார் மரபில் மிகவும் பொருளுள்ளது ஆகும்.
திருமணமான நகரத்தார் ஆண் பிள்ளை ஒரு புள்ளியாக கணக்கில் கொள்ளப் பெறுகின்றார். இதன்
பின் இவர் ஊர்ப் பொதுக் காரியங்களுக்கான புள்ளிவரி கட்ட வேண்டும். திருமணம் முதலான
நிகழ்ச்சிகளில் தனிக் குடும்பமாகக் கருதப்பட்டு அவர் பெயருக்கு அழைப்பு தரப்பெறும்.
அவர் பெயரில் மொய்ப்பணம் பெறப்பெறும். இவ்வகையில் புள்ளி என்பது இவர்கள் குலத்துள்
மிகப் பொருளுள்ளதாகின்றது.
புள்ளிக்குரிய ஆண் இறந்த சூழலில், அவரது மனைவி
வாழும் நிலையில் அவர் அரைப் புள்ளியாக கருதப்பட்டு அவரிடம் வரிப்பணம் முதலியன
அரையளவில் பெறப் பெறுகின்றன. மனைவி இறந்து கணவர் மட்டும் இருக்கும் சூழலில் அவர்
ஒரு புள்ளியாகவே கருதப்படுகிறார். சாதி மாற்றி திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள்
இப்புள்ளி என்னும் நிலைக்கு வாரார் என்பது இங்கே கருதத்தக்கது.
இவ்வாறு
நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபினர் தமக்கென தனித்த தமிழ் வழிப்பட்ட காரண காரியமிக்க
இன உணர்வுடைய முறைப் பெயர்களை அமைத்துக் கொண்டு தம் பண்பாட்டை நாகரீகத்தை குலமரபைக்
காத்து வருகின்றனர்.