Nagaratharonline.com
» All
» Interview
» Article
Article
     





சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தினுடைய  30-ஆவது ஆண்டு விழா, சென்னை - கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள வைபவம் லான்ஸ் என்ற ரிசார்ட்டில் ஜனவரி 2-ஆம் தேதி அன்று நடைபெற்றது. 

இந்த விழாவிற்கு, நமது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின்  உறுப்பினரும், தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சருமாகிய மாண்புமிகு திரு. கே.ஆர். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 

அவர் தம்முடைய உரையில், நகரத்தார்களின் ஆன்மீகப் பணிகளையும், அறப் பணிகளையும் வெகுவாகப் பாராட்டினார். ஒற்றுமையாக வாழும் பண்பையும் போற்றினார். "உறவினர்கள் அடித்துக் கொள்ளாமல், சொத்துக்களைப் பிரித்துக் கொள்கின்ற போது, 'செட்டி முறை'யில் நாங்கள் ஒத்துப் போய் விட்டோம் என்று சொல்வது ஊர் வழக்கம். அந்த வகையில் 'செட்டி முறை' என்பது சண்டை இல்லாமல் பேசித் தீர்த்துக் கொள்வது தான். அந்தப் பெருமை நகரத்தார்களுக்கு என்றும் உண்டு" என்று கூறினார். "உங்கள் தேவைகள் எதுவானாலும் என்னை அணுகலாம். அதைச் செய்து தர வேண்டியது என் பொறுப்பு. அதே நேரத்தில் நகரத்தார்கள் அவரவரது சொந்த ஊர்களில் வாக்குகளை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்" என்றும் வலியுறுத்தினார்.

இந்த விழாவில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளரும், பிரபல பேச்சாளருமான திரு. இரா. விஜயன், "எல்லோரும் இன்புற்றிருக்க" என்ற தலைப்பில் விரிவாக சிறப்புரையாற்றினார். 

தொடர்ந்து, பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும், அதனை பயன்படுத்தி அரசு வேலை பெறுவது எப்படி என்பது பற்றியும் விரிவாகப் பேசினார், கணேஷ்'ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனரும், அரசுப் பணிகளுக்கான பயிற்சியாளருமாகிய திரு. எஸ். கணேச சுப்பிரமணியன்.

சென்ற ஆண்டு கோவிட் பெருந்தொற்று காரணமாக நெற்குப்பையில் இருந்து பழனிக்கு காவடி சுமந்து செல்வதற்கு அனுமதி பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டபோது பழனி கோவிலின் இணை ஆணையர் வரை பேசி அனுமதி பெற்றுத் தந்தவர், சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. சித்திரை ஆனந்தம். இந்த நிகழ்வுக்காக சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கம், அவரைப் பாராட்டி மகிழ்ந்தது. 

இந்த விழாவின் தொடக்கத்தில் செல்வி ராம. ஜனனி, செல்வி சுவேதா நாச்சமை ஆகியோர் இறைவணக்கம் பாடினர். சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் தலைவர் திரு. அருணாசலம் கணேஷ்வர் வரவேற்புரையாற்றினார. செயலாளர் திரு. கே..ஆர்.எஸ். சாத்தப்பன் கடந்த ஆண்டுகளின் செயல்பாடுகள் குறித்து உரை நிகழ்த்தினார். பொருளாளர் திரு. எம்.ஆர். பெரியகருப்பன் நிதி அறிக்கையை வாசித்தார். முன்னாள் தலைவர் திரு. க. தியாகராஜன் கல்வி நிதி அறிக்கையை வாசித்தார். விழாவின் இறுதியில் துணைத்தலைவர் திரு. எம்.பி. சாத்தப்பன் நன்றியுரை வழங்கினார். 

இந்த விழாவின்போது சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் உறுப்பினர்களது வீட்டுப்  பிள்ளைகளுக்கு அமைச்சரின் பொற்கரங்களால் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

நடப்பு நிர்வாகிகளின் பதவிக் காலம் நிறைவு பெற்றதால், இந்த சங்கத்தினுடைய புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது. 

திரு. பி.ஆர். சுந்தர் தலைவராகவும், திரு. எம். வெள்ளையன் துணைத் தலைவராகவும், திரு. எல். இராமநாதன் செயலாளராகவும், திரு. எம். வாசு  மற்றும் திரு. பி. எல். அடைக்கப்பன் துணைச் செயலாளர்களாகவும், திரு. எஸ். சீனிவாசன் பொருளாளராகவும் 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.  

பிறகு உறுப்பினர்களின் பிள்ளைகளது தனித்திறமை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உறுப்பினர்களே பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. "லாக் டவுனில் பெரிதும் பாதிக்கப் பட்டது ஆண்களா ? பெண்களா ?" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பட்டிமன்றத்தில்  பேராசிரியை திருமதி அன்னபூரணி நடுவராகவும்,  "ஆண்களே !" என்ற அணியில் திரு. எல். ராமநாதனும், திருமதி அழகு பரணி விஜயனும், திருமதி இராம. வள்ளியம்மையும், "பெண்களே !" என்ற அணியில் திரு. எஸ். நடராஜனும், திருமதி நித்யகல்யாணி சாத்தப்பனும், திருமதி லதா வாசுவும் பங்கேற்றனர். இறுதியில் நடுவர் "லாக் டவுனில் பெரிதும் பாதிக்கப்பட்டது பெண்களே" என்று தீர்ப்பளித்தார். 

தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் விளையாட்டுப் போட்டிகள், மகளிருக்கான கழிவிலிருந்து  கைவினைப் பொருட்கள் செய்யும் போட்டி, ஜுவல் மேக்கிங் போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.