Nagaratharonline.com
 
25 சவரன் திருட்டு: ஆம்னி பஸ் நிலையத்தில் கைவரிசை  Nov 22, 09
 
வெளியூர் செல்வதற்கு கோயம் பேடு பஸ் நிலையம் வந்த பயணியிடம் 25 சவரன் நகைகள் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.




ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் சிவசொக்கலிங்கம்(35); தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மீனாட்சி. நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான காரைக்குடி செல்ல, இருவரும் தி.நகர் சென்று அங்கிருந்து தனியார் ஆம்னி பஸ்சில் ஏறினர். மற்ற பயணிகளை ஏற்றுவதற்காக அந்த பஸ், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் வந்தது. அப்போது இருவருக்கும் டிபன் வாங்குவதற்காக பஸ்சில் இருந்து சிவசொக்கலிங்கம் இறங்கினார். தன்னிடம் இருந்த பையை மீனாட்சியிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். அந்த பையில் 25 சவரன் நகைகளை இருந்தது. டிபன் வாங்கிய பின், பஸ்சில் ஏறிய சிவசொக்கலிங்கம், மனைவியிடம் பையை கேட்டார்.




மீனாட்சி சீட்டில் வைத்திருந்த பையை தேடியபோது அது மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த இருவரும் பஸ் முழுவதும் தேடினர். பயணிகள் மற்றும் பஸ் ஊழியர் களிடம் விசாரித்தனர். பின், கோயம் பேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் 25 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். கடந்த 18ம் தேதி அரியலூர் செல்ல மனைவியுடன் அரசு பஸ் நிலையம் வந்த மாநகர போக்குவரத்துக் கழக டிரைவர் மோகனிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டது. அந்த சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குள் கோயம் பேட்டில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.




போலீஸ் பற்றாக்குறை: கோயம் பேடு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் முன்பு 25க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வந்துள்ளனர். ஆனால், இப்போது 11 போலீசார் மட்டுமே உள்ளனர். கோயம்பேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரே குற்றப்பிரிவுக்கும் பொறுப்பாளராக இருந்து வருகிறார். போலீஸ் ரோந்து செல்வதற்கும் வாகனங்கள் இல்லை. இது போன்ற காரணங்களே கோயம்பேட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்று போலீசார் புலம்புகின்றனர்.

source : Dinamalar 23/11/09