Nagaratharonline.com
 
காரைக்குடி ரோட்டில் தத்தி தத்தி செல்லும் வாகனங்கள்  Nov 1, 11
 
காரைக்குடியில் போக்குவரத்து மிகுந்த ரோடுகள் மழையால் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் தத்தி...தத்தி... செல்லும் பரிதாப நிலை உள்ளது.

சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, போக்குவரத்து மிகுந்த நூறடி சாலை, கல்லூரி சாலை, சுப்பிரமணியபுரம் (தெற்கு) முதல் வீதி, பழைய போலீஸ் ஸ்டேஷன் ரோடு, சூடாமணிபுரம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கோர்ட் வாசலில் இருந்து புது பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் ரோடு என பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிகவும் சேதமடைந்துள்ளது.நகராட்சி நிர்வாகம் இந்த ரோட்டை சீரமைப்பதோடு, எதிர்காலத்தில் இதுபோல் சேதமடையாமல் இருக்க ரோட்டோரங்களில் வடிகால் வசதி அவசியம் அமைக்க வேண்டும்.

காரைக்குடியில் இருந்து பள்ளத்தூர் வழியாக திருச்சி மெயின் ரோட்டை ஒட்டி செட்டிநாடு அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள சங்கரன் கால்வாய் பாலத்தை கடந்து தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் இந்த பாலம் அருகே அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் காணப்படுகிறது. விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு பள்ளம் இருப்பது தெரியாமல் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் முன் ரோட்டை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source : Dinamalar