|
ஏர்போர்ட் ஏ.சி., பஸ் திட்டத்திற்கு வரவேற்பு Nov 8, 11 |
|
பயணிகள் வசதிக்காக, விமான நிலையத்தில் இருந்து இரு தடங்களில் இயக்கப்பட்டு வரும் ஏ.சி., மினி பஸ்களுக்கு, வரவேற்பு கிடைத்து வருகிறது. விமானப் பயணிகளின் வசதிக்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து எழும்பூர், அண்ணா நகர் என இரு தடங்களில், ஏ.சி.மினி பஸ்களை மாநகர போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. தற்போது, பன்னாட்டு முனைய வருகைப் பகுதி நுழைவாயில் அருகே பூத் அமைக்கப்பட்டு, அங்கு மாநகர பஸ்கள் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேரப் பட்டியலும் அங்கு பொருத்தப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்து ஊழியர்கள், விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பயணிகளை வரவேற்று, பஸ்களில் ஏற்றுகின்றனர். முதல் நாள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகள் இந்த பஸ்களை பயன்படுத்தினர்.அடுத்தடுத்த நாட்களில் வசூல் களைகட்டியுள்ளது. முதல் நாள், 3,000 ரூபாய் என்ற அளவில் இருந்த மினி பஸ் வசூல், மறு நாள் 4,500 ரூபாயை தொட்டது. மூன்றாம் நாள் 5,500 ரூபாய் என்ற அளவில் வசூலாகியுள்ளது. இதன் மூலம், ஏ.சி., மினி பஸ்களுக்கு, பயணிகள் வரவேற்பு கிடைத்துள்ளது.கடந்த ஆட்சியின் போது, விமான நிலையத்தில் இருந்து, வால்வோ ஏ.சி., பஸ்கள் இயக்கப்பட்டன.
அதில், கட்டணமாக, 50, 75, 100, 120 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒரே கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.எங்கு இறங்கினாலும் ஒரே கட்டணம் என்ற திட்டம், பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன் போல, தூரத்திற்கு ஏற்றாற்போல், கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
source ; Dinamalar |
|
|
|
|
|