|
நூலகங்களே கோயில்கள், நூல்களே தெய்வங்கள்: தமிழண்ணல் Nov 20, 11 |
|
நூலகங்களே கோயில்கள், அதில் உள்ள நூல்களே தெய்வங்கள் என்று குறிப்பிட்டார் தமிழறிஞர் தமிழண்ணல்.
சிவகங்கையில் 44-வது நூலக வார விழா, கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழறிஞர் தமிழண்ணல் சிறப்புரையாற்றுகையில், தமிழுக்கு மொழி பெயர்ப்பு நூல்கள் அதிகம் தேவை. தமிழ் நூல்கள் பிற மொழிகளிலும், பிற மொழி நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்க நா.தர்மராஜன் போன்றோர் தேவை. நூல்கள் அறிவுப் பெட்டகங்கள். நூல்களை இயற்றியவர்கள் அவர்களுக்கு பிறகும், தங்களின் நூல்கள் மூலம் வாழ்கின்றனர். திருவள்ளுவரும், இளங்கோவும், பாரதியும் இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகின்றனர் என்றார்.
தினமணியில் தான் எழுதிய கட்டுரை குறித்து பேசுகையில், நூலகங்களே கோயில்கள், அங்கு உள்ள நூல்களே தெய்வங்கள். கோயில்களைக் கட்டி கும்பாபிஷேகம் செய்ய அதிக பணத்தை செலவிடும் நாம், நூலகங்களையும் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும். நூலகங்களை ஏற்படுத்தினாலும் புண்ணியம் கிடைக்கும்.
இறைவன் கோயில் கர்ப்ப கிரகத்தில் மட்டும் இல்லை. ஒவ்வொரு நூலிலும் இறைவன் இருக்கிறார். இதை மக்கள் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும். நூல்களை அதிகம் கற்றால் நம்முடைய டி.என்.ஏ. தூய்மை அடைகிறது. பள்ளிகள், மருத்துவமனைகள், நூலகங்களைக் கட்டுவதும் இறைத் தொண்டுதான்.
இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழில் வாசித்து தமிழிலேயே உரையாட வேண்டும். ஆங்கிலத்தில் வாசித்து ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டும். இரு மொழிகளையும் கலந்து பேசக் கூடாது. பல கோடிகளை செலவு செய்து மாநாடுகளை நடத்துவதால் தமிழை வாழ வைக்க முடியாது. நூல்களை எழுதுபவர்களுக்கும், நூல்களை வெளியிடுபவர்களுக்கும் அரசு நிதியுதவி தர வேண்டும். அப்போதுதான், தமிழை வளர்க்க முடியும் என்றார்.
source ; dinamani |
|
|
|
|
|