Nagaratharonline.com
 
சந்தை வழிகாட்டி மதிப்பு மாற்றம்: டிச. 4-க்குள் கருத்து தெரிவிக்கலாம்  Nov 30, 11
 
சந்தை வழிகாட்டி மதிப்பு ( Land Guide line value ) சட்டப்பூர்வமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ப. மகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1.8.2007-க்கு முன் நிர்ணயிக்கப்பட்ட சந்தை வழிகாட்டி மதிப்பு தற்போது நடைமுறையில் உள்ளது.
இதனிடையே, கடந்த காலங்களில் சந்தை மதிப்பில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன. எனவே, உண்மையான சந்தை மதிப்பை பிரதிபலிக்கும் வகையில், சந்தை வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைப்பதற்காகவும், அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கொடுப்பதற்காகவும், இந்திய முத்திரைச் சட்டப் பிரிவு 47(அ)-ல் திருத்தம் செய்யப்பட்டு இந்திய முத்திரைச் சட்டப் பிரிவு 47-அஅ உருவாக்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரு நகராட்சிகள், அன்னவாசல், அரிமளம், ஆலங்குடி, இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர், பொன்னமராவதி, கீரமங்கலம் ஆகிய 8 பேரூராட்சிகள் மற்றும் வருவாய் கிராமங்களின் வரைபடங்கள், அடங்கல், சரிபார்க்கப்பட்டும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம், ஆவண உயர் மதிப்பு ஆகியவை பரிசீலிக்கப்பட்டு, தற்போது வருவாய் கிராமம் வாரியாக வரைவு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு வழிகாட்டி துணைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
துணைக் குழுவின் ஒப்புதல் பெற்ற இந்த வரைவு வழிகாட்டி மதிப்பு பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு வழிகாட்டி மதிப்பில் முரண்பாடுகள் ஏதும் இருப்பின், பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை மாவட்ட ஆட்சியர், மாவட்டப் பதிவாளர், சம்மந்தப்பட்ட சார்பதிவாளர் ஆகியோரிடம் உரிய ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமாக டிச. 4-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
பொதுமக்களின் கருத்துரு பெறப்பட்டு, அவை, டிச. 5-ம் தேதி பரிசீலிக்கப்பட்டு உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
பிறகு மறுபடியும் விளம்பரப்படுத்தப்பட்டு மீண்டும் ஒருமுறை கருத்துக் கோரப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட இறுதி வழிகாட்டி மதிப்பானது துணைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு அரசு குறிப்பிடும் தேதியில் நடைமுறைப்படுத்தப்படும்.

source : Dinamani