|
புதுவயல் கால்நடை மருந்தகத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்தப்படுமா? Nov 30, 09 |
|
காரைக்குடி, நவ. 27: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயலில் பல ஆண்டுகளாக கால்நடை மருந்தகக் கிளை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் இயங்கிவருகிறது.
விவசாயத்துக்குத் துணைத் தொழில்களாக கால்நடை வளர்ப்புத் தொழில்களை அரசு ஊக்கப்படுத்திவரும் நிலையில், கழிவறை நாற்றத்துடன் இந்தக் கிளை நிலையம் உள்ளது.
சாக்கோட்டை ஒன்றியத்தில் கண்டனூர், பீர்க்கலைக்காடு என இரு கால்நடை மருந்தகங்கள் உள்ளன. புதுவயல், கோட்டையூர்-வேலங்குடி உள்பட 12 கால்நடை மருந்தகக் கிளை நிலையங்கள் உள்ளன.
சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மருந்தகங்களுக்கு 2 மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால், பீர்க்கலைக்காடு மருந்தகத்தில் பணியாற்றிய மருத்துவர் பதவி உயர்வுபெற்றுச் சென்றுவிட்டதால், கண்டனூர் மருத்துவரே ஓராண்டாக பொறுப்பேற்று வருகிறார்.
அதேபோன்று 12 கிளை நிலையங்களுக்கும் ஆய்வாளர்கள் 12 பேர் இருக்க வேண்டும். ஆனால் 4 பேர் மட்டுமே உள்ளனர்.
சாக்கோட்டை ஒன்றியத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை கால்நடை மருந்தகத்திற்கு கால்நடை வளர்ப்போர் சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசிகளுக்காக அனுகி வருகின்றனர்.
புதுவயலில் உள்ள கால்நடை மருந்தகக் கிளை நிலையத்தில் பல ஆண்டுகளாக ஆய்வாளர் இல்லாமல் வேறு பகுதியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வாரத்தில் 2 நாள்கள் கிளையைத் திறப்பதும் அந்த நேரத்தில் கொண்டு வரப்படும் சில குறிப்பிட்ட கால்நடைகளுக்குத் தேவையான மருந்து மற்றும் ஆலோசனைகளை கூறிவிட்டுச் செல்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
புதுவயலில் நகரத்தார்கள், நாட்டார்கள் என பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது பால் தேவைகளைப் பூர்த்தி செய்ய கறவை மாடுகளை வளர்க்க பலர் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவற்றிற்கு ஏற்படும் நோய்கள் மற்றும் மருத்துவ ஆலோசனை கிடைக்க வேண்டும் என்றால், புதுவயல் கால்நடை மருந்தகக் கிளை நிலையத்தை கால்நடை மருந்தகமாக உயர்த்தி பல அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
புதுவயல் கிளை நிலையத்துக்குப் பதவி உயர்வுபெற்று ஆய்வாளர் ஒருவர் தற்போது காலை 8 மணி முதல் 12 மணி வரை பணியில் இருந்து வருகிறார். இந்தக் கிளை நிலையத்துக்குச் சுற்றுச்சுவர் இல்லை. மின் இணைப்பு இல்லை. புதர் மண்டி பாம்பு, பூராண் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளே புகும் சூழ்நிலையில் உள்ளது.
இந்தக் கிளை நிலையத்துக்கு மணியாப்பட்டி, மணக்குடி, சொலப்பாயி, நடராஜபுரம், காமராஜர் நகர், வேங்காவயல், தேவர் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளான ஆடு, மாடு மற்றும் கோழிகள் என இவற்றுóக்கு தரப்படும் நோய்த் தடுப்பு மருந்து மற்றும் ஊசி, கறவை மாடுகளுக்கான சினைக் கருவூóட்டல் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், இதெல்லாம் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்றால் இந்தக் கிளை நிலையத்திற்கு முதலில் மின் இணைப்புத் தர வேண்டும். சுற்றுச்சுவர் எழுப்பியும், ஆய்வாளர் பயன்படுத்திக் கொள்ள கழிப்பறை வசதியும் செய்துதர வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை பார்வையிட வேண்டும்.
இதுகுறித்து கால்நடை மருந்தக அதிகாரி ஒருவர் கூறியது: சாக்கோட்டை ஒன்றியத்தில் கறவை மாடுகள் கலப்பினம், நாட்டு மாடுகளை வளர்க்கின்றனர். இப் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இல்லை. இதனால் தங்களது வீட்டுத் தேவைக்கு மட்டுமே கறவை மாடுகளை சிலர் வளர்த்து வருகின்றனர்.
பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் முன்னர் இயங்கி வந்திருக்கிறது. மீண்டும் பால் உற்பத்தியாளர் ஒன்றியம் செயல்படுóத்தினால் வியாபார ரீதியாக விவசாயிகள் கறவை மாடுகளை வளர்க்க முன் வருவார்கள்.
திட்டங்களுக்கு ஏற்ப ஆண்டுக்கு சுமார் 15 கால்நடை மருóத்துவ முகாம்கள் நடத்தி பொதுமக்களின் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கிவருகிறோம். பற்றாக்குறையாக உள்ள ஆய்வாளர்கள் நியமிக்க வேண்டும்,
பீர்க்கலைக்காடு, கண்ணங்குடி, திருப்பத்தூர் ஆகிய மருந்தகங்களில் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.
Source:Dinamani Nov 30 |
|
|
|
|
|