Nagaratharonline.com
 
திருவண்ணாமலையில் மகா தீபம்  Dec 7, 11
 
திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் தலமாகும். ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா இங்கு கோலாகலமாக நடைபெறும். மகா தீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

திருக்கொடியேற்றம்: கார்த்திகை தீப விழாவின் தொடக்க நிகழ்ச்சியான திருக்கொடியேற்றம், கடந்த 29-ம் தேதி நடைபெற்றது. நாள்தோறும் காலை, இரவு வேளைகளில் மூஷிகம், மயில், வெள்ளி அதிகாரநந்தி, ஹம்சம், சிம்ம வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுபத்துமூவர் உற்சவம், வெள்ளி ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்தனர். திங்கள்கிழமை பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து 11 நாள்கள் மலையின் மீது தீபம் ஏற்றப்படும்.

தீப விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம், நகராட்சி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக பஸ் நிலையங்கள், குடிநீர், கழிப்பறை வசதி, சுகாதாரம், மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கார்த்திகை தீப விழாவுக்காக 2000 சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் 15 ஆயிரம் வாகனங்களில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக விரிவான வாகன நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்தர்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source:Dinamani