|
நகரத்தார்களின் பாரம்பரிய "செவ்வாய் பொங்கல் விழா' Jan 14, 12 |
|
நாட்டரசன்கோட்டையில் ஜன.,17 அன்று "செவ்வாய் பொங்கல்' விழா கொண்டாடப்பட உள்ளது. பாரம்பரிய பொங்கல்:ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கலை அடுத்து வரும் முதல் செவ்வாயன்று, நகரத்தார்கள் கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஒன்று கூடுவர். அங்கு பொங்கல் வைத்து (வெண்பொங்கல் மட்டுமே) வழிபடுவர். இதை 150 ஆண்டுகளாக நகரத்தார்கள் கொண்டாடுகின்றனர்.
இந்த விழாவை நடத்த, நிர்வாகிகள் தேர்வு நடக்கும். அவர்கள் புள்ளி வாரியாக (குடும்பம்) வரி வசூல் செய்து, 880 குடும்ப (புள்ளி) தலைவர்கள் பெயரை எழுதி, வெள்ளி குடத்தில் போட்டு, குலுக்கி எடுப்பர். முதல் சீட்டில் பெயர் வருபவரின் குடும்பத்தாருக்கு, கோயில் சார்பில் முதல் மரியாதை தரப்படும். இக்குடும்பத்தினர், பானையுடன் கோயில் உட்பிரகாரத்தை சுற்றி, முதல் பொங்கலை வைப்பர். இதை தொடர்ந்து மற்றவர்கள் பொங்கல் வைப்பர்.
இவ்வூர் நகரத்தார்கள் வணிகத்திற்காக அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன், மலேசியாவில் குடியேறியுள்ளனர். இவர்கள், வேறு எந்த விழாவிற்கு வராவிட்டாலும், ""செவ்வாய் பொங்கலுக்கு'' கட்டாயம் குடும்பத்தாருடன் வந்து விடுவர். பல மாதங்கள் கழித்து, உறவினர்களை பார்ப்பதால், உள்ளபூரிப்புடன் நலம் விசாரிப்பர். திருமணம் முடிக்காத ஆண், பெண்களுக்கு வரன் தேடும் படலமும் நடக்கும். இந்த விழாவை காண கனடா, தென்ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். பாகனேரியை சேர்ந்த நகரத்தார்களும், ஜன.,17 அன்று பாகனேரியில் ஒன்று கூடி "செவ்வாய் பொங்கலை' கொண்டாடுவர்.
source : Dinamalar |
|
|
|
|
|