|
மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் : பொன்னமராவதியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் Jan 26, 12 |
|
மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
பொன்னமராவதியில் திங்கள்கிழமை நடைபெற்ற முத்தமிழ்ப் பாசறை தமிழர் திருநாள் விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
சங்க காலத்தில் அன்னதானம் செய்வது சிறப்பாகக் கருதப்பட்டது. அதற்கு அடுத்த காலத்தில் கல்விச் சாலைகள் அமைப்பது சிறப்பாகக் கருதப்பட்டது. தற்போது, உடல் உறுப்பு தானம் சிறப்பாகக் கருதப்படுகிறது.
இந்த மனிதநேயம் போற்றதக்கது. மனிதநேயம் வளர்க்கப்பட வேண்டும். நமது உயிர் ரத்த ஓட்டத்திலோ, இருதயத் துடிப்பிலோ இல்லை. நமது உயிர் அன்பில் இருக்கிறது. இன்பத் தமிழ்க் கல்வி எல்லோரும் கற்றால் துன்பம் நீங்கி சுகம் உண்டாகும் என்பார் பாரதிதாசன்.
ஒரு காலத்தில் அரசபீடத்தில் அலங்காரமாய் வீற்றிருந்தது நமது தமிழ் மொழி. உலகத்திலேயே ஒரு சமயத்தை உயர்த்திப் பிடித்த பெருமை நமது தமிழ் மொழிக்கு மட்டுமே உரியது. தீபாவளி, பொங்கல் திருநாள்களில் புத்தாடை உடுத்தி கொண்டாடுகிறோம். அதேபோல, கலைமகள் விழாவான சரஸ்வதி பூஜைக்கு ஏன் புதிய புத்தகங்கள் வாங்குவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது என்று இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.
கட்சி, ஜாதி, சமய அடையாளங்களைத் தகர்த்து இந்த முத்தமிழ்ப் பாசறை நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் பண்பாடு செழிக்கட்டும். அவ்வழியில் நம் வாழ்வியல் அமையட்டும் என்றார் பொன்னம்பல அடிகளார்.
source ; Dinamani |
|
|
|
|
|