Nagaratharonline.com
 
சொக்கநாதபுரத்தில் ஆச்சியை கொன்று நகைக் கொள்ளை : 4 பேர் கும்பல் கைவரிசை  Mar 15, 12
 
மதகுபட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் செட்டியார் (73). இவரது மனைவி சரோஜா என்கிற அழகம்மை (65). இவர்களின் மகன் நாகப்பன், அறந்தாங்கியில் வட்டிக் கடை நடத்தி வருகிறார். மகள் மல்லிகா மதுரையில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
சொக்கநாதபுரத்துக்கு வாரத்துக்கு இரு முறை வந்து தாய், தந்தையரை பார்த்துவிட்டுச் செல்வது நாகப்பனின் வழக்கம். முதியவர் சிங்காரமும், சரோஜாவும் மட்டும் அந்த வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு உதவியாக ஜெயலட்சுமி (25) என்ற பெண், கடந்த 10 ஆண்டுகளாக வீட்டு வேலைகளைச் செய்து அங்கேயே தங்கியுள்ளார்.


இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், இவர்களது வீட்டின் வெளிக் கதவின் பூட்டையும், கிரில் கதவின் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்துள்ளது. மேலும், உள்ளேயிருந்த கதவை தட்டிவிட்டு, அந்த கும்பல் ஒளிந்துகொண்டதாம்.
சத்தம் கேட்டு எழுந்துவந்து கதவைத் திறந்து பார்த்த சிங்காரத்தின் வாயை, கும்பலினர் ஆசிட் போன்ற பொருளில் தோய்த்து எடுக்கப்பட்ட துணியைக் கொண்டு பொத்தியதால், அவர் மயக்கமடைந்தார். பின்னர், அவரது கை, கால்களை நாற்காலியுடன் கட்டிவிட்டனர்.
எதிர்ப்பு தெரிவித்த வேலைக்காரப் பெண் ஜெயலட்சுமியின் கை, கால்களையும் கட்டிவிட்டனர். அழகம்மை ஏற்கெனவே மூச்சுத் திணறல் நோயால் அவதிப்படுவதால், அவரது வாய் மற்றும் மூக்கை பொத்தியதால், அவர் மூச்சு விட முடியாமல் இறந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி ஆகியவை தவிர, 2 தங்கச் சங்கிலி, 4 வளையல்களைக் கொள்ளையடித்த கும்பலினர், லாக்கர் சாவியைத் தேடிப் பார்த்துள்ளனர். மேலும், கிடைத்த சாவிகளை வைத்து லாக்கரை திறக்க முயற்சி செய்தும் திறக்க முடியாததால், அப்படியே போட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
மறுநாள் காலை, அந்த வீட்டின் பின்புறம் குடியிருக்கும் கலையரசி என்பவர் வாசல் தெளிக்க வந்தபோது, வீடு திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அனைவரும் இருப்பதைப் பார்த்து, சத்தம் எழுப்பியுள்ளார். பின்னர், அக்கம்பக்கத்தினர் வந்து கட்டுகளை அவிழ்த்துவிட்டு, காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மயக்கத்தில் இருந்த முதியவர் சிங்காரம், காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலட்சுமி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மு. பன்னீர்செல்வம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெ. கண்ணன் உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, ராமநாதபுரத்திலிருந்து போலீஸ் மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட்டது. அது 2 தெருக்களின் வழியாக வேகமாக ஓடிவிட்டு திரும்பிவிட்டது. சம்பவம் நடந்த பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் சாவியுடன் ஒரு ஸ்கூட்டர் கேட்பாரற்று நின்றிருந்தது. ஆனால், அந்த வண்டி இருந்த இடத்துக்கு நாய் செல்லவில்லை.
இது குறித்து, மதகுபட்டி போலீஸôர் வழக்குப் பதிந்து, அழகம்மையின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

source : Dinamani