Nagaratharonline.com
 
சென்னை விமான நிலையத்தில் வாகன கட்டணக் கொள்ளை  Apr 10, 12
 
சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் நுழையும் வாகனங்கள், பயணிகளை இறக்கிவிட்டு 5 நிமிடத்துக்குள் வெளியேறிவிட வேண்டும். இல்லையெனில் சிறிய கார்களுக்கு ரூ. 60, சொகுசு கார்களுக்கு ரூ. 70 மற்றும் பஸ், வேன்களுக்கு ரூ. 220 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

5 நிமிடத்தில் இருந்து 4 மணிநேரம் வரைதான் இந்தக் கட்டணம்.
பொதுவாக, விமான நிலையத்துக்குள் நுழையும் வாகனங்கள் 5 நிமிடத்துக்குள்ளாகவே பயணிகளை இறக்கி விட்டுச் சென்றாலும் 5 நிமிடத்தைத் தாண்டி விட்டதாகக் கூறி வெளியே செல்லும் வாயிலில் உள்ள கவுன்ட்டரில் கட்டணம் வசூல் செய்து விடுகின்றனராம்.

பயணி ஒருவர் கூறியது: விமான நிலையத்தின் நுழைவுவாயிலில், சுங்கச் சாவடியில் உள்ளதுபோல் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விமான நிலையத்தினுள் வர முடியாமல் விமானத்தை தவறவிட வேண்டியதாகிவிட்டது என்றார்.

மற்றொரு பயணி கூறியது: விமான நிலையத்துக்குள் வாகனம் நுழைந்து விட்டால் போதும் கட்டணத்தை செலுத்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு பயணிகள் தள்ளப் பட்டுள்ளனர்.

source : Dinamani