Nagaratharonline.com
 
காரைக்குடியில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்கப்படுமா?  Jun 9, 12
 
எளிய மக்களின் பொருளாதாரச் சூழ்நிலையைக் கருதியும், போக்குவரத்து நலன்கருதியும் மாவட்டத் தலைநகரில் இயக்கப்பட்டுவரும் ஷேர் ஆட்டோக்கள் போன்று, காரைக்குடியிலும் இயக்க அனுமதியளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் எதிர்பாக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மிகப்பெரிய நகரம் காரைக்குடி. புராதன நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. சுமார் 1 லட்சத்திற்குமேல் மக்கள் தொகை உள்ள நகரமாக காரைக்குடி விளங்கினாலும், சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பிரபல கோவில்களான பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, அரியக்குடி மற்றும் பட்டமங்கலம் போன்ற ஆன்மீகத் தலங்களும், செட்டிநாடு அரண்மனை போன்ற புராதன வீடுகள் உள்ள சுற்றுலாத் தலமும் உள்ளதால், சுமார் 50 ஆயிரம் பேர் வரை வெளியூரிலிருந்து வந்து செல்லும் நகரமாகவும் உள்ளது.

காரைக்குடி அருகே புதுவயல், பள்ளத்தூர் பகுதிகளில் அரிசி ஆலைகள் நிறைந்திருப்பதால் அதற்கான தொழிலாளர்கள் பலரும், அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா கல்லூரிகள், பள்ளிகளின் மாணவர்கள் சிலரும் என 15 கி.மீ சுற்றளவுக்கு இந்நகருக்கு வந்து திரும்புகின்றனர். இப்படிப்பட்ட ஊரில் பல மணி நேரம் நகர பஸ்களுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

காரைக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. அதனால் மாவட்ட தலைநகரத்தில் இயக்க அனுமதித்த ஷேர் ஆட்டோக்கள், காரைக்குடி நகரத்திற்கும் அனுமதியளித்தால் எளிய மக்களின் போக்குவரத்துக்கு ஓரளவுக்கு தீர்வு கிட்டும் என்கிறார் காரைக்குடி தொழில் வணிக கழகத் தலைவர் முத்துபழனியப்பன்.
மேலும் அவர் கூறியது: மக்கள் உரிய நேரத்தில் தேவையான இடங்களுக்குச் சென்றுவர காரைக்குடி தொழில் வணிகக்கழகம் ஷேர் ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

source : Dinamani