Nagaratharonline.com
 
திருச்சி : மின் மீட்டர் வாங்குவதற்கு பொதுமக்கள் அவதி!  Jun 20, 12
 
திருச்சி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோருக்கு, திருச்சியில் மட்டுமே நான்கு கடைகளில் மின் மீட்டர்கள் வழங்கப்படுவதால், மின் நுகர்வோர்கள் கடும் அலைச்சலுக்கு உள்ளாயினர்.

இம்மாவட்டங்களில் வீடுகள், கடைகள் என பல்லாயிரக்கணக்கோர் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பிக்கும்போது மின் மீட்டருக்கும் சேர்த்து டெபாஸிட் தொகையை வசூல் செய்த மின்வாரியம், தற்போது மின்மீட்டர் தட்டுப்பாடு என்ற காரணத்தை காட்டி, கடந்த ஏழு மாதமாக மின் இணைப்பு தராமல் பொதுமக்களை இழுத்தடித்து வந்தது.
ஒருவழியாக, தனியார் கடைகளில் மின் மீட்டர் வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வந்ததால்,விரைவில் இணைப்பு வாங்கிவிடலாம் என்று "நம்பிக்கை'யுடன் காத்திருந்த பொதுமக்கள், மின்மீட்டர் வழங்கப்பட்ட நேற்றைய தினம் அல்லலோகப்பட்டனர்.



இதுகுறித்து மின்மீட்டர் வாங்க வரிசையில் நின்ற, அகில இந்திய மக்கள் நலம் நாடும் கட்சி திருச்சி மாவட்டச்செயலாளர் பஷீர் அகமது கூறியதாவது:
ஒருமுனை (சிங்கிள் பேஸ்) இணைப்புக்கு 1,600 டெபாஸிட் வாங்கப்பட்டது. பணம் கட்டி, ஆறு, ஏழு மாதம் கழித்தும் சர்வீஸ் தரவில்லை. பணத்தை வாங்கி கொண்டு, மீட்டர் ஸ்டாக் இல்லை என்றனர்.
கடந்த மாதம் கடைகளில் வாங்கி கொடுங்கள் என்றனர். ஆனால் எங்களது டெபாஸிட் தொகையை குறைக்கவில்லை. டெபாஸிட் தொகையில் இருந்து மீட்டருக்கான பணத்தையும் திருப்பி தரவில்லை.
மின்மீட்டர் விநியோகம் செய்ய இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளனர். அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு கடைகளுக்கு மட்டுமே விற்பனை அனுமதியளித்துள்ளனர்.
ஆறு மாவட்டத்துக்கு திருச்சி சூப்பர் பஜாரில் உள்ள அபிராமி, கீதா, மேலப்புலிவார்டு சாலையில் உள்ள கற்பகம், தென்னூர் அண்ணாநகரில் உள்ள மேக்ஸ் கடைகளுக்கு மட்டும் விற்பனை செய்கின்றன.
மேக்ஸ் நிறுவனம் முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற ரீதியில் விற்பனை செய்கிறது. மற்ற மூன்று கடைகள் முன்பதிவு முறையில் விற்பனை செய்கின்றன. 1,200 மற்றும் 1,250 ரூபாய்க்கு மீட்டர் விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கச்செல்லும் ஏழை மக்களை போல, பணம் கொடுத்து வாங்கியும் பொதுமக்கள் இன்று (நேற்று) பட்ட அவஸ்தை வார்த்தைகளால் சொல்லி மாளாது

source : Dinamalar