|
தேவகோட்டை:நீர் வளங்களை பேணிக் காக்க தவறிவிட்டோம்: பொன்னம்பல அடிகளார் Dec 16, 09 |
|
தேவகோட்டை, டிச. 15: நீர் வளங்களை பேணிக் காக்க நாம் தவறிவிட்டோம் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நால்வர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரனுக்கு பென்குயின் பதிப்பகம் அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி அவர் பேசியது:
சிவகங்கை மாவட்டத்தின் பல வரலாறுகள் நமக்குத் தெரியாமல் போய்விட்டன. இந்த மண்ணில் பல ஆறுகள் புதையுண்டு விட்டன. நீர் வளத்தை நாம் முறையாக பராமரிக்கத் தவறியதே இதற்குக் காரணம்.
மதுரையில் பெய்யும் மழை நீர், பல கண்மாய்களை நிரப்பி சிவகங்கை மாவட்டம் வழியாக ராமநாதபுரம் கண்மாய்க்குச் செல்லும் வகையில் நீர்வழிப் பாதை நம் முன்னோர்களால் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு நகரத்தார்களால் பல குளங்கள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டன. ஆனால் இன்று அது மாதிரி செய்ய வாய்ப்பில்லை. பணம் இருந்தாலும் வேலை செய்ய ஆள் இல்லை. தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தூர்வார மட்டும்தான் முடியும்.
இன்று நமது மக்களின் அறிவை மழுங்கடிக்கச் செய்யும் நிகழ்ச்சிகள், தொலைக்காட்சியில் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகின்றன. ஆனால், இதுமாதிரி இலக்கியத் தமிழை வளர்க்கும் நிகழ்ச்சிகள் நடப்பது அரிதாகிவிட்டது.
ஆய்வுக்கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை அப்படியே இருந்துவிட்டால் அது தத்துவம். அவை மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் மாற்றப்பட வேண்டும்.
மகாத்மா காந்தியை உருவாக்கிய மண் நம்முடையது. தீண்டாமையை ஒழிக்க தேவகோட்டைக்கு வந்த காந்தி, மதுரை செல்லும் வழியில் திருப்பத்தூர் அருகே உடலில் துணியின்றி கல் உடைத்த தொழிலாளியைப் பாரத்து, தான் அணிந்திருந்த கோட்டை கழற்றி எறிந்துவிட்டு வெறும் கோவணத்துடன் அன்று முதல் சென்றார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் அவலங்களை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் என்று கூறி, டர்பன் நகருக்குள் செல்ல அவரை அனுமதிக்கவில்லை. இரவில் மட்டும் செல்லலாம் எனக் கூறினர். இரவில் செல்வதற்கு நான் திருடன் அல்ல எனக் கூறி, பகலில் சென்று சொல்லடியும் கல்லடியும் பட்டார். மேலும் ஆசிய நாட்டவர் அனைவரும் தங்களது பத்து விரல்களையும் பதிவுசெய்து அட்டை வைத்துக்கொள்ள வேண்டும் என தென் ஆப்பிரிக்க அரசு இட்ட உத்தரவை, பல நூறு பேரை திரட்டி தீயிட்டுக் கொளுத்தினார். அதுதான் இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்னோட்டமாக இருந்தது.
புத்தகம் படிக்கவே நேரம் கிடைக்காத காலத்தில், 102-வது புத்தகத்தை எழுதி தனது பதிப்பகம் மூலம் வெளியிட்ட அரு.சோமசுந்தரன் போன்றவர்கள் தமிழை வாழ வைப்பவர்கள் என்றார் அடிகளார்.
முன்னதாக பென்குயின் பதிப்பகம் அனுப்பிய பரிசான தங்கப் பதக்கத்தையும் வெள்ளிக் கேடயத்தையும் சோமசுந்தரனுக்கு அடிகளார் வழங்கினார். அவர் எழுதிய அருசோ கவிதைகள் நூலை வெளியிட்டார். முதல் பிரதியை ஈரோடு நகரத்தார் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியன் செட்டியார் பெற்றுக்கொண்டார்.
ஜமீன்தார் நாராயணன் செட்டியார் தலைமை வகித்தார், காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கெüரவிக்கப்பட்டார். குமரப்பன், வள்ளியப்பன், சபாஅருணாச்சலம்,சேதுராமன், செட்டியப்பன், ஆண்டியப்பன், காசிநாதன், பேராசிரியர் அய்க்கண் ஆகியோர் பாராட்டினர். அப்பச்சி சபாபதி அறிமுக உரையாற்றினார். அருசோ அருணாச்சலம் நன்றி கூறினார்.
Source: Dinamani - 16 Dec 2009 |
|
|
|
|
|