|
பராமரிப்பு செலவு அதிகம் சிதையும் பாரம்பரிய பங்களாக்கள் Dec 17, 09 |
|
காரைக்குடியில் பாரம்பரிய செட்டிநாடு பங்களாக்களை பராமரிக்க முடியாததால், வீட்டடி மனைகளாக மாற்றி வருகின்றனர். சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 76 பாரம்பரிய நகரங்கள் உள்ளன. இங்கு 5,000-க்கும் மேற்பட்ட செட்டிநாடு பாரம்பரிய பங்களாக்கள் உள்ளன. பங்களாக்கள் சுக்காங்கல், செங்கல், தேக்கு மரங்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு வீடும் தரையிலிருந்து நான்கு அடி உயரத்திற்கு மேல் உள்ளன. விலை உயர்ந்த பர்மா தேக்கு, பெல்ஜியம் கண்ணாடியால் கட்டியவை. காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கண்டனூரில் கலை நயத்துடன் பங்களாக்கள் காட்சி அளிக்கின்றன. ஒவ்வொரு வீடும் ஒன்றரை ஏக்கர் பரப்பில் உள்ளன. ஒரு பங்களாவை முழுவதுமாக சுற்றி பார்க்க ஒரு மணி நேரம் வரை செலவாகும். பங்களாக்களின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் உறவினர்களை கொண்டு பராமரிக்கின்றனர். பங்களாவிற்கு பராமரிப்பு செலவு மட்டும் ஐந்து லட்சம் ரூபாய்.
வீட்டடி மனையாகும் பங்களா: இங்குள்ள பெரும்பாலான பங்களாக்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளன. பராமரிப்பு செலவு அதிகமாவதால் சிலர் வீட்டை அழகுபடுத்த தயங்குகின்றனர். முறையான பராமரிப்பின்றி காணப்படும் பல பங்களாக்களின் சுவர்கள் விரிசலடைந்தும், முகப்புகள் சேதமடைந்துள்ளது. இதனால் இது போன்ற பங்களாக்களை முற்றிலும் அகற்றி மனையிடமாக மாற்றிவருகின்றனர்.
செட்டிநாடு புராதான வளர்ச்சி, பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனியப்பன் கூறுகையில், ""இங்குள்ள ஒவ்வொரு பங்களாவும் 15 முதல் 20 கோடி ரூபாய் வரை மதிப்புள்ளவை. இவை பிரான்ஸ், இந்தோனேஷியா, அமெரிக்கா போன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. பராமரிப்பு செலவை சமாளிக்க முடியாமல் பங்களாக்களை அகற்றி இடத்தை மனையிடமாக மாற்றி விற்று வருகின்றனர். பங்களாவில் சேகரமாகும் உத்திரம், மரத்தூண், கதவு, ஜன்னல்களை வெளி நாட்டிற்கு விற்கின்றனர். இதனால் பாரம்பரிய பங்களாக்களின் எண் ணிக்கை குறைந்துவருகிறது'' என்றார்.
source : Dinamalar 18/12/09 |
|
|
|
|
|