|
பொன்னமராவதி : புறம்போக்கு நிலத்தைப் பத்திரப் பதிவு செய்து விற்றதாகப் புகார் Jul 15, 12 |
|
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். செபஸ்தியான், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். பிரதாப்சிங் ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், வருவாய்க் கோட்ட அலுவரிடம் அளித்த புகார் மனு:
பொன்னமராவதி பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிலையம் மற்றும் தனியார் வாடகைக் கார் நிலையம் இயங்கி வருகிறது.
பொன்னமராவதி சர்வே எண்: 842-1-ல் உள்ள இந்த இடம் நத்தம் புறம்போக்கில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேற்படி இடத்தை பொன்னமராவதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மோசடியாக பட்டா போட்டுள்ளார். இப்பட்டா புதுக்கோட்டை கோட்டாட்சியர் உத்தரவுப்படி ரத்து செய்யப்பட்டது. உத்தரவை எதிர்த்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டபோது, அவரும் பட்டா ரத்து உத்தரவை உறுதி செய்தார்.
இந்நிலையில், பட்டாவை ரத்து செய்து நத்தமாக மாற்றப்பட்டதை மறைத்து, கடந்த 2004-ல் அம்மாபட்டியைச் சேர்ந்த பழ. வாசு என்ற வாசுதேவனுக்கு சுப்பிரமணியன் மேற்படி இடத்தைக் கிரயம் செய்து கொடுத்தாராம்.
இதையடுத்து, வாசுதேவன் தொட்டியப்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் மனைவி ஜெயலெட்சுமிக்குக் கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
நிலச் சீர்திருத்த ஆணையரும் கடந்த 31.8.2012 ரத்து உத்தரவை உறுதி செய்ததோடு, மேற்படி இடம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி என்றும், வருங்காலத்தில் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கு அந்த இடம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, மோசடியாக செய்யப்பட்ட பத்திரப் பதிவை ரத்து செய்வதோடு, மோசடியில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
source ; dinamani |
|
|
|
|
|