Nagaratharonline.com
 
சதுரகிரியில் மொட்டைக்கு அடாவடி வசூல்: அறநிலைய கமிஷனர் எச்சரிக்கை!  Jul 16, 12
 
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை விழாவில், மொட்டைக்கு கண்டபடி கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ,என, இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் செந்தில்வேலவன் எச்சரித்துள்ளார். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

மொட்டைக்கு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.10 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் இதில் முடி சேகரத்திற்கு டெண்டர் எடுப்பவர்கள், குறைந்தது ரூ.100 லிருந்து ரூ.250 வரை கட்டணமாக அடாவடியாக வசூலிக்கின்றனர். கோயில் வரும் ஏழை பக்தர்கள், மொட்டை கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். மேலும் பலர், கட்டணத்தை கட்ட முடியாமல், நேர்த்திக்கடனையும் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

முடி எடுக்க 100 நாவிதர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மொட்டை போடும் பணியில் ஈடுபடுபவர்கள் அதிக கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட நாவிதர் வெளியேற்றப்படுவார். மொட்டைக்கு கட்டணமாக ரூ.10 மட்டுமே பக்தர்கள் வழங்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் செந்தில்வேலவன்