|
பிள்ளைகளுக்கு நேர்மை, உழைப்பை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்: நீதிபதி கற்பகவிநாயகம் Jul 23, 12 |
|
காரைக்குடி, ஜூலை 22: பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட, அவர்களுக்கு நேர்மை, உழைப்பை கற்றுக்கொடுக்க வேண்டும் என நீதிபதி கற்பகவிநாயகம் கேட்டுக்கொண்டார்.
காரைக்குடி அருகேயுள்ள கோவிலூர் மடாலயத்தின் சார்பில், நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத் திறப்பு விழா கடந்த சனிக்கிழமை கோவிலூர் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
அகில இந்திய மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி எம். கற்பகவிநாயகம் விழாவில் பங்கேற்று கல்லூரிக் கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது:
கல்லூரி நடத்துபவர்கள் கல்வியை வியாபாரமாக்காமல் ஏழை மாணவர்களையும் கல்லூரியில் சேர்த்து அவர்களுக்கு கல்வி கொடுத்து உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து, பணம் சேர்த்து வைப்பதைவிட அவர்களுக்கு நேர்மை, உழைப்பு, திறமை இவைகளை கற்றுக்கொடுப்பது சிறந்ததாகும் என்றார்.
விழாவில் ஏ.எம்.எம் அறக்கட்டளை அறங்காவலர் எம்.வி.சுப்பையா செட்டியார், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் உமையாள் ராமநாதன், கல்கண்டு இதழ் ஆசிரியர் லேணா தமிழ்வாணன், கல்லூரி முதல்வர் குமரப்பன் உள்ளிட்டோர் விழாவில் பேசினர். கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
Source:Dinamani |
|
|
|
|
|