|
திருப்பரங்குன்றம் கோயில் யானையின் இறுதி ஊர்வலம்: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி Jul 29, 12 |
|
திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணியர் கோயில் யானை ஔவையின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மாலை தனது 53 வயதில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தது யானை ஔவை. இதை அடுத்து, நேற்று கோயில் நடை அடைக்கப்பட்டது. கோயில் யானை மண்டபத்தில் ஔவை வைக்கப்பட்டு விடிய விடிய பக்தர்கள் அதன் உடலுக்கு மாலை சூட்டி, அபிஷேகம் செய்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை கோயிலுக்குச் சொந்தமான பசுமடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கிருமிகள் வராமல் இருக்க உப்பு, மஞ்சள் பொடி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவை போட்டு மூடப்பட்டது. பின்னர் கோயிலில் இருந்து யானையின் உடல் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, பசுமடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த யானை, கடந்த 1971-ம் ஆண்டு அதன் 12-ஆவது வயதில் பொள்ளாச்சி டாப் சிலிப் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அன்று முதல் அது திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.
தினமும் முருகனின் அபிஷேகத்துக்காக காலை ஐந்தரை மணிக்கெல்லாம் சரவணப் பொய்கை சென்று குடத்தில் நீர் எடுத்து வருவது அதன் பணி. அதை வைத்துத் தான் ஸ்ரீசுப்ரமண்யருக்கு அபிஷேகம் நடைபெறும். திருப்பரங்குன்றம் உற்ஸவ மூர்த்தி வெளியே வீதியுலா செல்லும் நேரத்தில் ஔவையும் உடன் செல்லும்.
பக்தர்கள் இந்த யானையின் நினைவில் ஆழ்ந்து போயினர். |
|
|
|
|
|