|
தேவகோட்டைக்கு திருப்பதி ஏழுமலையான் வருகை Aug 29, 12 |
|
தேவகோட்டைக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தார் ஏழுமலையான் வெங்கடாசலபதி.
தேவகோட்டையில் நடைபெற உள்ள திருக்கல்யாணத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த சுவாமிக்கு தேவகோட்டை நகர எல்லை ஒத்தக்கடையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் உள்ளிட்ட நகர பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த திருக்கல்யாணம் புதன்கிழமை மாலை நகரத்தார் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறுகிறது. இதில் 25 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கடந்த ஒருமாதமாக மேடை மற்றும் விளக்குகள் அமைக்கும் பணி பல லட்ச ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டது. சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் கிடைக்கும் பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருக்கல்யாணத்தை பாலன் டிரஸ்டை சேர்ந்தவர்கள் நடத்துகிறார்கள்.
ஒத்தக்கடையிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சுவாமியை வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் வணங்கினர். இதைத்தொடர்ந்து சாய்ராம் திருமண மண்டபத்தில் சுப்ரபாத வழிபாடு நடைபெற்றது. புதன்கிழமை காலை சுவாமி ஊர்வலம் புறப்பட்டு சிவன்கோவில், சாய்பாபா கோவில், காந்திவீதி, கருதாவூரணி ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை திருக்கல்யாண இடத்தை அடைவார். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் நான்கு வாகனங்களில் வந்துள்ளனர். |
|
|
|
|
|