Nagaratharonline.com
 
பொன்னமராவதி : எல்லை பிரச்னையில் சிக்கித் தவிக்கும் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு  Oct 10, 12
 
எல்லைப் பிரச்னையால் பொன்னமராவதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது.

பொன்னமராவதியில் 1995-ல் வீட்டுவசதி வாரியம் சார்பில் 114 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன. இந்த வீடுகளுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விநியோகம், பூங்கா உள்ளிட்டவற்றை செய்து தரும் பணி பொன்னமராவதி பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, பேரூராட்சி சுமார் 10 மாதங்கள் பராமரிப்பு பணிகளை செய்து வந்தது. இந்நிலையில் வீடுகள் கட்டப்பட்ட நிலம் காட்டுப்பட்டி ஊராட்சி எல்லைக்கு உள்பட்டது என ஊராட்சித் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றமும், வீடுகளுக்கு வரி வசூல் உரிமை மற்றும் பராமரிப்பு பொறுப்புகளை பொன்னமராவதி பேரூராட்சிக்கே வழங்கி உத்தரவிட்டது.

இதன்படி வீடுகளின் உரிமையாளர்கள் பேரூட்சிக்கு வரி செலுத்தி வந்தனர். இந்நிலையில் மீண்டும் காட்டுப்பட்டி ஊராட்சித் தலைவர் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றம், குடியிருப்பு எல்லையை தீர்மானிக்கும் அதிகாரத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கி உத்தரவிட்டது.

ஆனால் ஆட்சியர் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதனால், இங்கு நல்ல குடிநீர், சாலைப் பராமரிப்பு, தெருவிளக்கு இல்லாமலும் தெருக்கள் சுத்தம் செய்யப்படாமல் மக்கள் அவதிப்படுவதோடு, பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் இப்பிரச்னையில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.