Nagaratharonline.com
 
காரைக்குடியில் இன்று கவியரசர் கண்ணதாசன் விழா  Oct 13, 12
 
கவியரசர் கண்ணதாசன் சமூகநல அறக்கட்டளை சார்பில் 23-ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் விழா, காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக். 14) நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு, விழாவை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை. துணைவேந்தர் கா. மணிமேகலை துவக்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் நடுவராகப் பொறுப்பேற்று நடத்தும் பட்டிமன்றம் நடைபெறுகிறது. கண்ணதாசன் பாடல்களின் வெற்றிக்குப் பெரிதும் துணை புரிந்தது எனும் தலைப்பில் இன்பச் சுவையா எனும் பொருளில் ஓர் அணியும், இறை நெறியா எனும் பொருளில் மற்றொரு அணியும் வாதிடுகின்றனர்.

அதைத் தொடர்ந்து, பாரதி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பகலில் தாலாட்டுப் போட்டியும்,கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். மாலையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து, நடைபெறும் விருது வழங்கும் விழாவில், திரைப்பட இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கும், குமாரராணி டாக்டர் மீனா முத்தையாவுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து தி. கண்ணன் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் மற்றும் காந்தி கண்ணதாசன், அண்ணாதுரை கண்ணதாசன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை கவியரசர் கண்ணதாசன் சமூகநல அறக்கட்டளை பொதுச்செயலாளர் கவிஞர் அரு. நாகப்பன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.