Nagaratharonline.com
 
காரைக்குடியில் அரசு நிலங்களை காப்பதில் அதிகாரிகள் மெத்தனம்  Dec 28, 12
 
காரைக்குடி கழனிவாசல் குரூப் சர்வே எண்: 65/ 1, 2ல் 400க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. வருவாய் துறை ரிக்கார்டில், இவை ரயத்வாரி புஞ்சை நிலம் என உள்ளது. ஆனால், இதையும் மீறி, உதவி நிலவரி அலுவலர் முறைகேடாக, பலருக்கு அரசு நிலங்களை பட்டா போட்டு கொடுத்துள்ளார்.

இந்த இடத்தில், தொழிற்சாலை கட்ட, 2009 ல் கலெக்டராக இருந்த பங்கஜ்குமார் பன்சால், கழனிவாசல் பகுதியில் உள்ள அரசு நிலங்களை ஆய்வு செய்தார். அப்போது, முறைகேடாக 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள், தனியாருக்கு பட்டா போட்டுள்ள விஷயம் தெரியவந்தது.
இதில்,பெரும்பாலான இடங்களை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் வாங்கி, வீட்டடிமனைகளாக மாற்றியிருப்பதை, அப்போதைய கலெக்டர் பங்கஜ் குமார் பன்சால் கண்டறிந்தார்.
இதையடுத்து, கழனிவாசல் குரூப்- சர்வே எண் 65/ 1, 2ல் உள்ள நிலங்களை விற்கவோ, வாங்கவோ கூடாது என்றும், இந்த நிலங்களை பதிவு செய்ய, பத்திரபதிவு அலுவலகங்களுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இதனால், 2009ல் இருந்து இன்று வரை, அந்த இடம் தொடர்பாக, பத்திரப்பதிவு அலுவலகங்களில், எந்த பதிவும் நடக்கவில்லை. இதனால், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உட்பட பலர் வாங்கிய இடங்களை விற்க முடியாமல் திணறுகின்றனர்.
அப்பகுதியில் இடம் வாங்கியவர்களும், முறையாக பதிய முடியாமல், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.