Nagaratharonline.com
 
NEWS REPORT: ஒக்கூர் மாசாத்தியார் நினைவு ஸ்தூபி பராமரிக்கப்படுமா?  Apr 16, 13
 
சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ளது ஒக்கூர். பாண்டிய மன்னர் காலத்தில் இந்த ஊரில் பிறந்து வாழ்ந்தவர் மாசாத்தியார். இவர் புத்த மதத்தைத் தழுவிய சங்ககாலப் பெண் புலவர்.

இவர் பாடிய பாடல்கள் அகநானூற்றில் இரண்டும், குறுந்தொகையில் ஐந்தும், புறநானூற்றில் ஒன்றுமாக இடம் பெற்றுள்ளது.

ஒக்கூரில் பிறந்ததால் இவர் ஒக்கூர் மாசாத்தியார் என அழைக்கப்பட்டார்.ஒரு சமயம் மாசாத்தியார் , பெருநகரம் ஒன்றில் நுழைந்தபோது அந்த நாடு அண்டை நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்தது. ஊரின் நிலையைப் பார்த்தபடியே ஒரு மறக்குடி மங்கையின் வீட்டினுள் நுழைந்தார் புலவர் பெருமாட்டி.

அங்கு அவர் கண்ட காட்சி இவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு பெருமிதம் அடையச் செய்தது.

முன்னாளில் நிகழ்ந்த போரில் இவளது தந்தை இறந்தார். இவள் கணவனோ போர்க்களத்தே மாண்டார். இன்றும் போர்ப்பறை ஒலி கேட்ட பெண், தனக்கு ஒரே மகன் இவன் என எண்ணாமல் மகனை போருக்கு அனுப்ப முடிவு செய்து, மகனை அருகே அழைத்து
அவன் தலையில் எண்ணெய் பூசி இழுத்து முடித்தாள். அரையில் தூய வெண்ணிற ஆடையை எடுத்து உடுத்தினாள். அவன் கையில் கூர்மையான வேல் ஒன்றைத் தந்தாள். அவன் முகத்தை நோக்கி, மகனே! உன் தந்தையும், தனையரும் போர்க்களத்தே மாண்டனர். நம் மறக்குலப் பெருமையை நிறுவினர். நீயும் அவர் போன்று போருக்குச் செல்க என அனுப்பி வைத்தாள்.

இக் காட்சியைப் பார்த்த மாசாத்தியார் மனத்துள் வியந்து பாராட் "கெடுக சிந்தை கடிதிவள் துணிவே' எனத் துவங்கும் பாடல் ஒன்றைப் பாடினார்.

ஒக்கூர் மாசாத்தியாருக்கு சிறப்பு செய்யும் வகையில், அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1992 ஆம் ஆண்டு ஒக்கூர் பஸ் நிறுத்தம் அருகே நினைவுச் சின்னம் எழுப்பியது. இடதுபுறம் ஒரு யானை நிற்பது போன்றும், வலதுபுறம் ஒரு யானை நிற்பது போன்றும் நினைவுச் சின்னம் உள்ளது.

மாசாத்தியாரைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடம் நெடுஞ்சாலையின் விளிம்பில் இருந்தாலும், தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. நினைவு ஸ்தூபி இடம் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

source : Dinamani