Nagaratharonline.com
 
உ. சிறுவயலில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பட்டிமன்றம்  May 15, 13
 
உ. சிறுவயலில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் திங்கள்கிழமை இரவு கம்பன் கழக தொடக்க விழா சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் பட்டிமன்றத்தை தொடக்கி வைத்தார். தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் எல். சபாரெத்தினம் செட்டியார் முன்னிலை வகித்தார்.


கம்பன் நெறிப்படி, கண்ணதாசன் கவி வழிப்படி பெரிதும் போற்றப்படுபவர் பெண்களா?. ஆண்களா? என்ற தலைப்பிலான பட்டிமன்றத்திற்கு டாக்டர் அ. அறிவொளி நடுவராகப் பொறுப்பேற்று நடத்தினார்.
இதில், பேராசிரியர் கண்ணதாசன் தலைமையிலான கோடையிடி கோபால், வள்ளியப்பன் அணியினர் ஆண்களே... என கம்பராமாயணத்தில் ஆண் பாத்திரங்களும், பெண் பாத்திரங்களும் கம்பன் அமைத்திருக்கும் பாங்கு, கண்ணதாசன் கவிதை வரிகளில் ஆண்களை குறிப்பிட்டுள்ளது குறித்து தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

பெண்களே...என முனைவர் சரஸ்வதி நாகப்பன் தலைமையில் முனைவர் ஜோதிலெட்சுமி, மதுரை ஜோதிகா அணியினர் தங்களது வாதத்தில், ராமன் தடுமாற்றம் அடைந்து வாலி மீது அம்புபோட காரணம் சீதை அருகே இல்லாத காரணத்தால்தான். பெண் குடும்பத்தை நிர்வகிப்பவள். ஆண்கள் சுயநலம் கொண்டவர்கள். கம்பன் படைத்திருக்கும் பாத்திரங்களில் ஆண்கள் பல இடங்களிலும் தடுமாற்றம் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் பெண் பாத்திரங்கள் அனைத்திலும் எந்தவித தடுமாற்றமும் காணப்படவில்லை. எந்த வகையில் பார்த்தாலும் பெண்கள் அன்றும் இன்றும் கம்பன் நெறிப்படி, கண்ணதாசன் கவி வழிப்படி போற்றப்படுபவள்தான் என்று வாதிட்டனர்.


கம்ப ராமாயணத்தில் நல்லவனையும், கெட்டவனையும் கம்பன் படைத்துக்காட்டி யிருக்கிறான். கவியரசர் கண்ணதாசன் நிலை தடுமாறியவர்தான் என்றாலும் அவரது பாடல்கள் அத்தனையும் அவரது மனத்திலிருந்து வரவில்லை. அவரது ஆன்மாவிலி ருந்து வந்தவையே. கம்பன், கண்ணதாசன் படைப்புகளை வைத்து நாம் பார்க்கிற போது பெரிதும் போற்றப்படுபவர் பெண்கள் தான் என்று தீர்ப்பு அளித்தார். கவிஞர் அரு. நாகப்பன் நன்றி கூறினார்.