Nagaratharonline.com
 
கடலூரில் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்கிய மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி கைது  Aug 23, 13
 
கடலூரில் ரூபாய் ஒன்றரை லட்சத்தை லஞ்சமாக வாங்கிய மாவட்ட வணிக வரித் துறை அதிகாரி ராஜேஸ்வரி (40) லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரால் வெள்ளியன்று கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்ட வணிக வரித் துறை அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி, சிதம்பரம் பகுதியில் இன்று கடைகளில் அதிரடி ஆய்வு செய்தார்.

அப்போது, தேரடி கடைத் தெருவில் உள்ள நிலக்கரி சாம்பலில் இருந்து செங்கல் தயாரிக்கும் பி.எஸ்.கே. பிளை ஆஷ் நிறுவனத்தில் ஆய்வு செய்த ராஜேஸ்வரி, நிறுவனத்துக்கு விதிக்கப்படும் வரியில் இருந்து குறைத்து வரி விதிக்க ரூ.8 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

இது குறித்து நிறுவன உரிமையாளர் சதீஷ் குமார் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, இன்று மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் அந்த நிறுவனத்துக்கு அருகே மறைந்திருந்தனர்.

அப்போது, ரூபாய் ஒன்றரை லட்சத்தை சதீஷ்குமார், அதிகாரி ராஜேஸ்வரியிடம் லஞ்சமாகக் கொடுத்த போது மறைந்திருந்த காவல்துறையினர், அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.