Nagaratharonline.com
 
சனிப்பெயர்ச்சிக்கு திருநள்ளாறு தயார்!  Sep 20, 09
 
காரைக்கால், செப். 19: அடுத்த வாரம் சனிப்பெயர்ச்சி நிகழ உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்க இப்போதே தயாராகிவிட்டது திருநள்ளாறு.


அடுத்த வாரம் சிறப்பு வழிபாடு: திருநள்ளாறு அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனி சன்னதி கொண்டிருக்கும் சனி பகவானுக்கு செப்டம்பர் 26-ம் தேதி பிற்பகல் 3.27 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்வில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்காக கோயில் நிர்வாகம் தரிசனத்துக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.


வரிசைகள், கட்டணங்களில் மாற்றம்: கடந்த சனிப்பெயர்ச்சியின்போது சிறப்பு வரிசைகளுக்கென வகுக்கப்பட்ட கட்டண முறை இப்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு வரிசைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


புதிய முறைப்படி, சாதாரண கட்டண வரிசைக்கு ஒருவர் ரூ.50 செலுத்த வேண்டும்; விசேஷ தரிசன வரிசைக்கு ரூ.250 செலுத்த வேண்டும். தவிர, வழக்கமான தர்ம தரிசன வரிசையும் உண்டு.


நளன் குளத்திலிருந்து தர்ம தரிசனத்துக்கான வரிசைக்குத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, தெற்கு வீதியிலிருந்து கட்டண தரிசனத்துக்கான வரிசைக்குத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன வெயிலோ, மழையோ பக்தர்களைப் பாதிக்காதவாறு மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.


விஐபி பாஸýக்கு கட்டுப்பாடு: இம்முறை இலவசமாக "விஐபி பாஸ்' பெற்று சனிபகவானைத் தரிசிக்க முற்படும் "சிறப்பு பக்தர்கள்' எண்ணிக்கை வெகுவாகக் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிகிறது. "விஐபி பாஸ்' கேட்டு அணுகுவோரிடம், ரூ.250 செலுத்தி விசேஷ தரிசன வரிசையில் செல்ல அறிவுறுத்தத் திட்டமிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இப்போதே தொடங்கிவிட்டது கூட்டம்: வழக்கத்துக்கு மாறாக கடந்த சில வாரங்களாகவே, அதாவது சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே சனிக்கிழமைகளில் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது.


ஆகையால், இந்த சிறப்பு ஏற்பாடுகள் முன்கூட்டியே அமலுக்கு வந்துவிட்டன. இந்த சனிக்கிழமையும் அதிகாலை முதலே கோயிலில் நல்ல கூட்டம் காணப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ந.வசந்தகுமார், கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கோயிலைப் பார்வையிட்டனர். முன்னேற்பாடுகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.

source : Dhinamani 20 sep 2009