|
NEWS REPORT: மனைப்பிரிவு அங்கீகாரத்தை சரி பார்ப்பது முக்கியம்! Oct 2, 13 |
|
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு அனுமதி பெறாமலே மனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது நடக்கிறது. அந்த மனைகளில் வீடு கட்ட அனுமதி கிடைக்காது. எனவே மனை வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும்.
மேலும் தனி, தனி வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் நிலங்கள் எவ்வளவு குறைவான பரப்பளவு உடையதாக இருந்தாலும் அவற்றிற்கு அங்கீகாரம் கொடுக்க ஊராட்சி மன்றங்களுக்கு தன்னிச்சையாக அதிகாரம் கிடையாது. நகர் ஊரமைப்புத் துறையால் மட்டுமே மனைப்பிரிவுகளுக்கு அனுமதி கொடுக்கமுடியும்.
அந்த மனைப்பிரிவில் சாலைகள், பூங்கா, விளையாட்டு திடல் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கு இடம் ஒதுக்கீடு செய்து இருக்க வேண்டும். அப்போது தான் ஊரமைப்பு துறை அப்ரூவல் அளிக்கும். அதன்பிறகே ஊராட்சி மன்றம் இறுதி அனுமதி வழங்க இயலும். ஆகவே ஊராட்சி பகுதியில் போடப்படும் எந்த ஒரு மனைப்பிரிவும் (லே அவுட்) ஊரமைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டு அதன் அனுமதி பெற்ற பிறகு போட்டால் மட்டுமே செல்லும்.
அப்படி அல்லாமல் ஊராட்சி தலைவருடைய ஒப்புதல் மட்டும் பெறப்பட்டு இருந்தால் அவை அரசு விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்படாத மனைகளாகவே (லே அவுட்) கருதப்படும். சாலை உள்பட பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ளாட்சி அமைப்புக்கு தான பத்திரமாக எழுதி கொடுக்கப்பட வேண்டும்.
அப்போது தான் ஊராட்சி மன்றம் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும். இல்லாவிட்டால் அந்த லேஅவுட்டுகளுக்கு ஊராட்சி மன்றம் மூலம் குடிநீர், சாலை வசதி, மின் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் கிடைக்காது.
முன் அனுமதி
பல இடங்களில் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கி வீடு கட்டியவர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் நிலை இருக்கிறது. எனவே, கிராமப் பகுதிகளில் உள்ள மனைகளை வாங்குவதற்கு முன்பு நகர் ஊரமைப்புத் துறையின் முன் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
மனைப் பிரிவில் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 23 அடியாவது இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் சாலையின் அகலம் மற்றும் மனையின் அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில் வீடு கட்ட அனுமதி கிடைப்பது கடினம்.
source : Thina Thanthi |
|
|
|
|
|