Nagaratharonline.com
 
வேந்தன்பட்டி நந்தியை வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றியாகும் : சிவல்புரி சிங்காரம் பேச்சு  Oct 14, 13
 
வேந்தன் பட்டியில் புகழ் பெற்ற நெய் நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள பிரமாண்ட நந்திக்கு பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து காலம், காலமாக வழிபட்டு வருகின்றனர். அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யில் ஈ, எறும்பு என்று எதுவும் மொய்ப்பதில்லை. இந்த நந்தியின் அருகில் சென்றால் எப்போதும் நெய் வாசத்துடன் கூடிய ஒரு இனிய நறுமணம் பரவிக் கொண்டு இருக்கும்.

பிரதோஷ காலங்களில் இந்த நந்திக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். அந்த நேரத்தில் பக்தர்கள் தாங்கள் நினைக்கும் காரியம் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது.

இந்த பிரசித்தி பெற்ற நந்தி கோவிலில் நடைபெற்ற ஆன்மிக விழாவில் செட்டிநாடு கிரிவலக்குழுத் தலைவர் சிவல்புரி சிங்காரம் கலந்து கொண்டு பேசியதாவது:–

பிரதோஷத்தன்று விரதமிருந்து வழிபட்டால், பிரச்சினைகளிலிருந்து விடுபட இயலும். வாழ்வை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள விரும்புபவர்கள், பிரதோஷ நேரத்தில் நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து, சிவனையும், உமாதேவியையும் வழிபடவேண்டும்.

இறைவனை சுமக்கும் நந்தியை நாம் சுமந்து வந்தால் நல்லதே நடக்கும். பிரதோஷத்தன்று சிவாலயங்கள் அனைத்திலும் காளை வாகனத்தின் மீது உற்சவரான சிவனும், உமாதேவியும் கோவிலின் சுற்று பிரகாரத்தில் உலா வருவார்கள். அப்போது இறைவனை சுமப்பவனை நாம் சுமந்தால் நமது வாழ்வில் நலம் சேரும். வளம் கூடும். நினைத்த காரியங்கள் வெற்றியாகும்.