|
தமிழண்ணலுக்கு கிடைத்த விருதால் தமிழினத்துக்கே பெருமை : அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன். Oct 27, 13 |
|
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற கல்லூரியின் முன்னாள் மாணவர் தமிழண்ணலுக்கு பாராட்டு விழா மற்றும் சன்மார்க்க சபையின் மூலம் தமிழ்ச்செம்மல் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சன்மார்க்க சபையின் தலைவர் ப.சா. சிங்காரம் தலைமை வகித்து மேலும் பேசியது:
உலகம் முழுவதும் தமிழ் பரப்பியவர் தமிழண்ணல். தமிழுக்காக தன்னை அர்ப்பணித்தவர். செம்மொழி விருதின் மூலம் உலக தமிழினத்துக்கே பெருமை சேர்த்துள்ளார்.
எனவே நாடெங்கும் தமிழ் உணர்வு வளர வேண்டும். கலாச்சாரம் வளர வேண்டும். தமிழ் மொழி உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட வேண்டும்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் செம்மொழி நிறுவனத்துக்கு மத்திய அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. ஆனால் அந்த அமைப்பு சரிவர செயல்படாமல் பணம் மீண்டும் மத்திய அரசுக்கே சென்று விடுகிறது. இதில் தமிழக அரசின் பேணுதல் சரியாக இல்லை.
தொடர்ந்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. திருமலை பாராட்டி பேசியது:
தமிழண்ணல் வாழும் நக்கீரராக விளங்குகிறார். அவர் படித்த சங்க இலக்கியங்கள் அவரை உருவாக்கியுள்ளது. வாழ்க்கை முழுவதும் எழுத்து, படிப்பு ஆகியவற்றை உயிர்மூச்சாகக் கொண்டவர். திருக்குறளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
தமிழண்ணல் இல்லை என்றால் ஒப்பிலக்கியம் இல்லை எனக்கூறும் அளவிற்கு சாதனை படைத்தவர். அன்னப்பறவை போன்று தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொள்பவர். கடின உழைப்பாளி. பணி ஆற்றும் போதும் ஒய்வுக்குப் பின்னும் தமிழ் மொழிக்காக இயங்கிக்கொண்டே உள்ளார் என்றார்.
தொடர்ந்து தமிழண்ணல் பேசியது:
இவ்விழா எனக்காக நடத்தப்படவில்லை. தமிழுக்காக நடத்தப்படுகிறது. பாராட்டுக்களை விரும்பாதவன் நான். அத்தகைய பாராட்டுக்கள் மிகையாக போய்விடக் கூடாது. இன்றைய தமிழாசிரியர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் உங்களை தமிழுக்கு தத்துக்கொடுத்து விடுங்கள். அதாவது தமிழுக்கு ஒப்படைத்து விடுங்கள்.
நான் வளர்வதற்கு காரணமாக இருந்தது இந்த சன்மார்க்கசபை. ஏழ்மையான சூழலில் வளர்ந்த நான் மன உறுதியுடன் தமிழுக்காக என்னை ஒப்படைத்துள்ளேன். மிகப்பெரிய தடைகளை மீறி எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்திய நாடே அங்கீகாரம் தந்துள்ளது எனக்கு கிடைத்த பேறு. பல தமிழண்ணல்கள் உருவாக வேண்டும். எனவே தமிழுக்கு உங்களை ஒப்படைத்து விடுங்கள். தமிழ் உங்களை காப்பாற்றும் என்றார் அவர். |
|
|
|
|
|