|
காரைக்குடி லெட்சுமணன் வீட்டில் 70 ஆயிரம் நூல்கள் Nov 1, 13 |
|
காரைக்குடி மேல ஊரணி வாய்க்கால் தெருவை சேர்ந்த லெட்சுமணன் 1990-களில், இலங்கைக்கு வியாபார நிமித்தமாக அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிட்டியது. உழைப்பின் ஊதியத்தில் ஒரு பகுதியை புத்தகங்களுக்காக செலவிட்டார்.
மகாபாரத சதுக்கம், ராமாயணம், முக்கூடற்பள்ளு, திருச்செந்தூர் பிள்ளை தமிழ், கான்சாகிப் சண்டை, திருவிளையாடற் புராணம், விபீஷண புத்தி படலம், திருவாசகம், தேவாரம், பருவகால இதழ்கள், தினசரி, வாரப்பத்திரிக்கை என, சிறுக சிறுக சேர்த்தது, வீட்டில் ஒரு நூலகத்தையே உருவாக்கினார்.புத்தகத்தில் மட்டுமன்றி, 1800களில் வெளிவந்த ஓலைச்சுவடிகளையும் படிக்க கற்று கொண்டு அவற்றையும் வாங்கி சேகரித்தார். துளசி ராமாயணம், வான்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், மகாபாரதம் ஆகியவை ஓலைச்சுவடிகளாக இவரிடம் உள்ளன. இது போக, சினிமா, நாடகம், சங்கீதம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், சுதந்திரத்தை ஊட்டி வளர்த்த துண்டு பிரசுரங்கள், 100 ஆண்டுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களின் ஓட்டு கேட்கும் துண்டு பிரசுரம், வாக்குறுதிகள் இவரிடம் வசப்பட்டது.
லட்சுமணன் கூறும்போது: 30 ஆண்டு உழைப்பு, இன்று 70 ஆயிரம் புத்தகங்களாக மாறி உள்ளது. எங்குமே கிடைக்காத அரிய வகை நூல்கள், ஓலை சுவடிகள் உள்ளன. இதற்காக வீட்டின் மாடியை ஒதுக்கியுள்ளேன். தற்போதும் புத்தகங்களை சேகரித்து வருகிறேன். கல்லூரி, பல்கலை அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் இங்கு வந்து புத்தகங்களை இலவசமாக படித்து, குறிப்பெடுத்து செல்லலாம். பழைய புத்தகங்கள் வேண்டாம் என்று விரும்புவோர் எங்களிடம் தரலாம். அழியாத பொக்கிஷமான அறிவை வழங்கும் நூல்களை சேர்க்கும்போது, கிடைக்கும் மகிழ்ச்சியே அளப்பரியது, என்றார்.
இவரை தொடர்பு கொள்ள 94429 85055. |
|
|
|
|
|