Nagaratharonline.com
 
காரைக்குடியில் டாக்டர் வங்கி கணக்கில் இ–மெயில் மூலம் ரூ.39 லட்சம் திருட்டு  Dec 4, 13
 
அமெரிக்காவில் வசிப்பவர் டாக்டர் அருணாச்சல தேனப்பன். இவருக்கு காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. தேனப்பன் அவ்வப்போது இந்த கணக்கில் பணம் போட்டு வந்தார். மேலும் இ–மெயில் தகவலின்படி அடிக்கடி நெட் பேக்கிங் முறையிலும் தேனப்பன் பண பரிவர்த்தனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு தேனப்பன் கணக்கிலிருந்து ரூ.25 லட்சத்தை குஜராத்தில் உள்ள தனியார் வங்கியில் உள்ள ஒரு கணக்கு எண்ணுக்கு அனுப்புமாறு இ–மெயில் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் இத்தொகையை குஜராத்தில் உள்ள தனியார் வங்கி கணக்குக்கு அனுப்பினர். இது குறித்து வங்கி அதிகாரிகள் தேனப்பனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

அப்போது தான் யாருக்கும் பணம் அனுப்புமாறு மெயில் அனுப்பவில்லை என்று தேனப்பன் கூறினார். இதையடுத்து தேனப்பனின் மெயிலை பயன்படுத்தி மோசடி கும்பல் பணம் எடுத்துள்ளது தெரியவந்தது. தேனப்பனின் மொத்த வங்கி இருப்பான ரூ.61 லட்சத்து 11 ஆயிரத்தில் ரூ.38 லட்சத்து 81 ஆயிரம் இ–மெயில் மூலம் அபேஸ் செய்யப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கி மேலாளர் பழனியப்பன் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னிஸ் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இ–மெயில் மூலம் வங்கி கணக்கில் ரூ.39 லட்சம் சுருட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.