|
சென்னையில் திருப்பதி போன்று பிரம்மாண்ட கோயில் கட்ட திட்டம் Sep 21, 09 |
|
சென்னை, செப். 20: "சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருப்பதி போன்று பிரம்மாண்ட கோயில் கட்டப்பட உள்ளது' என்று திருப்பதி தேவஸ்தான தலைவர் ஆதிகேசவலு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:
திருப்பதி கோயிலுக்கு இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்த லட்சக்கணக்கானோர் வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் பல மணி நேரம் காத்திருந்துதான் தரிசனம் செய்கின்றனர். சிலர் வாரந்தோறும், இன்னும் சிலர் மாதந்தோறும் கோயிலுக்கு வருகின்றனர்.
பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருப்பதி கோயிலில் இருப்பது போன்று அனைத்து வசதிகளுடன் கூடிய (திவ்ய ஷேத்திரம்) கோயில் சென்னை, தில்லி மற்றும் பெங்களூரில் உருவாக்க உள்ளோம். திருமண மண்டபம், நூலகம், உணவு சாலை, சிகிச்சை மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படும்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 10 ஏக்கர் இடத்தில் கோயில் அமைக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான இடம் ஒதுக்கி தருமாறு முதல்வரை சந்திக்க உள்ளோம்.
சென்னையில் அடுத்த மாதம் 28-ம் தேதி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பெரிய அளவில் திருமணம் நடத்த உள்ளோம். இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை வருபவர்களுக்காக நாராயணபுரம், நகரி, நாகலாபுரம் உள்ளிட்ட இடங்களில் தங்கும் விடுதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.
source : Dinamani 21/09/09 |
|
|
|
|
|