Nagaratharonline.com
 
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் கலந்துரையாடல்  Jan 5, 14
 
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அமெரிக்காவில் உள்ள சான்டியாகோ மாநில பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் எம்.சி. மாதவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு,இக்கூட்டத்தில் பேசியது: கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்த நான் 1963-ஆம் ஆண்டு உலக வங்கியின் இளம் வேலை வாய்ப்புத்திட்டத்தின்கீழ் முதல் இந்தியராக பணியாற்றினேன். கல்வியை நன்கு கற்றால் பல நாடுகளுக்குச் செல்லலாம். உயர் பதவிகள் வகிக்கலாம். பொருள் ஈட்டலாம். உலகளாவிய அமைப்புகளில் 46 ஆண்டுகள் பணியாற்றி தற்போது அமெரிக்காவில் பேராசிரியராக உள்ளேன்.

எங்கு படிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம். கிராமப்புறத்திலிருந்து அதிக மாணவர்கள் இக்கல்லூரியில் பயில்கிறீர்கள். பாடத்தோடு பொதுஅறிவு, மொழித்திறன் போன்றவைகளை மேம்படுத்திக்கொள்வது அவசியமா கும். அமெரிக்காவில் அரசிலும், பிறநிறுவனங்களிலும் உயர் பதவிகளை வகிப்பவர்களில் பலர் இந்தியர்களே. இந்திய மாணவர்களிடையே திறமைகள் நிறைந்திருக்கின்றன. இதற்குக்காரணம் அடிப்படைக் கல்வியாகும். கல்வி என்பது மனிதனின் சொத்து. இந்த சொத்து பெற்றுவிட்டால் பிற சொத்துக்கள் வேண்டுமென்பதில்லை என்றார்.

இக்கலந்துரையாடல் கூட்டத்துக்கு கல்லூரி முதல்வர் குமரப்பன் தலைமைவகித்தார்.