|
மின்கம்பி (காப்பர்) திருட்டால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு Jan 17, 10 |
|
சிவகங்கை அருகே மதகுபட்டி, கல்லல் பகுதியில் மின் (காப்பர் வயர்) கம்பி திருட்டு அதிகரிப்பால், கடந்த ஆண்டு மட்டும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 ஆயிரம் மீட்டர் வயர்கள் திருடு போனது. தொடர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிவகங்கை அருகே மதகுபட்டி, கல்லல் துணைமின் நிலையத்தில் இருந்து கல்லல், செம்பனூர், பாகனேரி, காடனேரி, நகரம்பட்டி, மதகுபட்டி உட்பட 70 கிராமங்களில் உள்ள 25 ஆயிரம் வீடு, விவசாய மோட்டார்களுக்கு மின்சப்ளையாகிறது.
கல்லல் துணை மின்நிலையத்திலிருந்து செம்பனூர், பாகனேரி, பனங்குடி, கண்டுபட்டி வழியாக சிறுவேலங்குடி வரையும், மதகுபட்டி துணைமின் நிலையத்தில் இருந்து ஒக்கூர், கீழப் பூங்குடி, அலவாக்கோட்டை, ஏரியூர், நகரம்பட்டி வழியாக காடனேரி வரை மின் வினியோகம் செய்யப்படுகிறது.
தொடர் திருட்டு: செம்பனூர் - பாகனேரி இடையே தீப்பாஞ்சன்காடு வனப்பகுதி வழியாக செல்லும் மின்கம்பங்கள் மற்றும் நகரம்பட்டி - காடனேரி இடையே கண்மாய்கரைகளில் மின்கம்பம் வழியாக செல்லும் விலை உயர்ந்த காப்பர் கம்பிகள் தான் அதிகளவில் திருடுகின்றனர். இங்கு கடந்த ஆண்டில் மட்டும் ஆறு முறை நடந்த திருட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 ஆயிரம் மீட்டர் வயர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
திருடுவது எப்படி: வயர் திருடர்கள் நள்ளிரவில் இக்காடுகளுக்குள் புகுந்து மின்கம்பத்தில் செல்லும் வயர்களில் இரண்டு வயர்களையும் தொடும் விதமாக வாழை மட்டை, மர கம்புகளை தூக்கி வீசியவுடன் மின்தடை ஏற்படும்.
மின்தடையை பயன்படுத்தி திருடர்கள் காப்பர் வயர்களை திருடி வாகனங்களில் கடத்துகின்றனர். இக்கும்பல் ஒரு முனையில் கம்பியை வெட்டினால் அது தானாகவே சுருண்டு அடுத்த முனைக்கு சென்றுவிடும். சுருண்ட கம்பிகளை எளிதில் கடத்தி விடுகின்றனர். காட்டு பகுதியில் தொடர் திருட்டு நடப்பதால் கிராமத்தினர் இதை கண்டுபிடிக்க முடியவில்லை.
கிராமத்தினர் அவதி: திருடர்கள் கம்பிகளை திருடி செல்வதற்காக செயற்கையாக மின்தடை செய்துவிடுகின்றனர். அன்று இரவு முழுவதும் இங்குள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்வினியோகம் தடைபடுகிறது. அதற்கு பின் மின்வாரிய ஊழியர்கள் காட்டுபகுதிக்குள் சென்று மின்திருட்டு நடந்ததை உறுதி செய்யவே ஒரு நாள் ஆகிவிடும். இதனால், திருட்டு நடக்கும் நாட்களில் கிராமத்தினர் மின் வசதியின்றி அவதிப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள் மின்சப்ளை இன்றி தவிக்கின்றனர்.
மின்மோட்டார்கள் மூலம் கிராமங்களில் உள்ள மேல்நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றப்படும் பணி பாதிப்பதால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.
கண்துடைப்பு வழக்கு: காப்பர் கம்பி திருட்டு குறித்து ஒவ்வொரு முறையும் மின்வாரிய அலுவலர்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தாலும், வயர் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முன்வருவதில்லை. வழக்கு மட்டுமே பதியப்படுகிறது. போலீஸ் நடவடிக்கை இன்றி இங்கு மின்கம்பி திருட்டுக்கள் அதிகரித்து வருகிறது. திருட்டுக்கள் அதிகரித்தபோதும், மின்வாரிய அலுவலர்களே, போலீசார் திருடர்களை பிடிக்க முன்வராததால் அடுத்து நடக்கும் திருட்டுக்கள் குறித்து புகார் தெரிவிக்க முன்வருவதில்லை.
இது போன்று மின்கம்பி திருட்டு மூலம் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
source : Dinamalar |
|
|
|
|
|