Nagaratharonline.com
 
கோவிலூர்மடாலயம் சார்பில் நடைபெற்ற குறள் விழா கவியரங்கம்  Feb 1, 14
 
கோவிலூர்மடாலயம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறள் விழா கவியரங்கத்தின்போது செம்மொழி விருதுபெற்ற முனைவர் தமிழண்ணலுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் தமிழண்ணல் பேசியதாவது: செம்மொழி விருதுபெற குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றேன். இதற்கு முன்பே கோவிலூர் ஆதீனம் நாச்சியப்ப சுவாமிக ளால் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச்செல்லப் பட்டுள்ளேன். சங்க இலக்கிய நூல்களை பதிப்பிக்கும் பணிகளை செய்யும் பணி என்னிடத்திலும், சுப. அண்ணாமலை யிடத்திலும் கொடுக்கப்பட்டது.

இப்பணியினை செய்த இருவரையும் அழைத்துச்சென்று டாக்டர் அப்துல்கலாம் தலைமையில், தில்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் வெளியிடச் செய்தார்கள். அப்போது எனக்களித்த பாராட்டுக்குக் காரணமாக இருந்த கோவிலூர் மடாலயத்திற்கு கடமைப்பட்டுள்ளேன்.

திருக்குறள் எக்காலத்துக்கும் ஏற்ற நூல். பள்ளி மாணவர் பலரை அழைத்து தெரிந்த பத்து குறள்களை எழுதுங்கள் என்றால் பல குறள்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும். பொதுவாக 100 முதல் 200 குறள்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். பெருவாரி யான குறள்களை படிப்பதுமில்லை, பயன்படுத்துவதுமில்லை. எனவே பயன்படுத்தப் படாத பல குறள்களைப் படிக்கச்செய்யவேண்டும்.

குறள் விழாவை நடத்தி சொற்பொழிவு ஆற்றுவதைவிட குறள்களைப் போதிப்பது, படிக்கச்செய்வது முக்கியம். படிக்கும் வகையில் சுவைபட மாணவர்களுக்குச் சொல்லலாம். இப்பணியைக் கோவிலூர் மடாலயம் செய்யவேண்டும். இதற்கு நானும் உதவ தயாராக இருக்கிறேன் என்றார். பின்னர் வள்ளுவர் நோக்கில் என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் வரவேற்றுப்பேசினார்.

கவியரங்கில் ஆக்கமும் அழுக்காறும் என்ற தலைப்பில் கவிஞர் அரு. சோமசுந்தரம், கற்றாரும் கல்லாரும் என்ற தலைப்பில் முனைவர் ச. சவகர்லால், காயும் கனியும் என்ற தலைப்பில் கவிஞர் மரு. பரமகுரு, பெரியாரும் சிறியாரும் என்ற தலைப்பில் கவிஞர் நா. மீனவன், வல்லோரும் எளியோரும் என்ற தலைப்பில் கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம் ஆகியோர் கவிதை வாசித்தனர்.

நிகழ்ச்சியில், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் குமரப்பன், பேராசிரியர் ஜெயசீலன், பள்ளி முதல்வர் மணிமொழி மோகன், பேராசிரியர் அய்க்கண், முனைவர் கரு. முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.