|
புத்தகத் திருவிழாவில் கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் Feb 23, 14 |
|
காரைக்குடி புத்தகத் திருவிழாக்குழு சார்பில் கம்பன் மணிமண்டபத்தில் நடத்தப்பட்ட 12-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கோவிலூர் ஆதீனம் பேசியது:
மிகப்பெரிய அறிஞர்கள், ஞானிகள் பிறந்த ஞானபூமி காரைக்குடி. தமிழக அளவில் பல பதிப்பகங்களும், பதிப்பாளர்களும் இப்பகுதியைச் சேர்ந்தவர்களே அதிகம். புத்தகங்கள் வாசிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக பள்ளிகளில் 8 வயது முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகள் வளர்ச்சிக்கு நாம் உதவவேண்டும். முதியோர்கள், பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்தவேணடும் என்பதை முதலில் மாணவப்பருவத்திலேயே கற்றுக்கொடுக்கவேண்டும். கல்வி என்பது வாழ்க்கைக்கு ஒரு கருவி. அதிலும் மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் இதர நல்ல விசயங்களை குழந்தைகளுக்கு கற்பிப்பது அவசியம் என்றார்.
விழாவில், புத்தகத் திருவிழாக் குழுத் தலைவர் பேராசிரியர் அயக்கண் தலைமை வகித்துப் பேசுகையில், இணையதளங்கள், இ. புத்தகங்கள் என வந்தாலும் புத்தகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. புத்தகத்தை வாசிப்பது என்பது சிறந்த வாழ்க்கையை உருவாக்குவது போன்றது. வீடுகள் தோறும் பூஜை அறைக்கு அருகிலேயே புத்தகஅறை இருக்கவேண்டும். பெரியோர்களை மதிக்க இளைய தலைமுறையினர் முன்வரவேண்டும். ஆயிரக்கணக்கில் செலவிட்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆடைகளை வாங்கும்போது நல்ல புத்தகங்களை வாங்கித்தர முன்வருவதில்லை. அதனால்தான் 12 ஆண்டுகளாக நல்ல புத்தகங்களை வாங்கவேண்டும் என்பதற்காக இந்த புத்தகத் திருவிழா நடத்திவருகிறோம் என்றார் |
|
|
|
|
|