Nagaratharonline.com
 
செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு  May 15, 14
 
செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேப்பேரியைச் சேர்ந்த வழக்குரைஞர் கோவிந்த் சந்திரசேகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
இந்த சுங்கச்சாவடி அமைந்துள்ள இடம் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 8 (2)யை மீறுவதாக உள்ளது. செங்கல்பட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் நகரச் சுங்கச் சாவடி உள்ளது. மேற்கூறப்பட்ட அதே பிரிவின் கீழ் 10 கி.மீ. தொலைவுக்குள் வேறொரு சுங்கச் சாவடி அமைக்க முடியாது.

இந்தச் சுங்கச் சாவடி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுங்கச் சாவடியில் வசூலிக்கும் சுங்கக் கட்டணம் மிகவும் அதிகமாகவும், நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் முரணாகவும் உள்ளது. சுங்கவரிக் கட்டணங்கள் தன்னிச்சையாக மாற்றப்பட்டு பொது மக்களிடம் வசூலிக்கப்படுகின்றன.
எனவே, பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு விடுமுறைகால நீதிபதிகள் ஆர்.சுதாகர், கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.