|
NEWS REPORT: குரு வேறு – தட்சிணாமூர்த்தி வேறு Jun 12, 14 |
|
|
|
தட்சிணாமூர்த்தி – தென்முகக் கடவுள். ஞானம் அளிக்கும் பொருட்டு, நல்லுபதேசம் நல்கி உண்மைப் பொருளை விளக்குவதற்காக சிவபெருமானே குரு வடிவம் தாங்கி நின்றார் என்பது தட்சிணாமூர்த்தி தத்துவம். ஆகவே நவக்கிரகங்களில் ஒருவராக வழிபடப்பெறும் குரு பகவானுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் எவ்விதத்திலும் தொடர்பு இல்லை.
பல்வேறு தெய்வங்களுக்கு ஒரே மாதிரியான பெயரோ அல்லது கதைகளோ இருக்கும் பட்சத்தில், பெயர்க் குழப்பத்தின் காரணமாக அந்த தெய்வங்களை ஒன்றாக எண்ணி வழிபட்டு வருவதை நாம் காண்கிறோம். இப்படி பல வழிபாட்டு முறைகள் முறை மாறி நடக்கின்றன. அப்படி ஒன்றுதான், குருவுக்குச் செய்ய வேண்டிய பூஜை முறைகளையும் பரிகாரங்களையும் தட்சிணமூர்த்திக்குச் செய்து வருகிறார்கள்.
குரு வேறு, தட்சிணாமூர்த்தி வேறு என்பதைப் புரிந்து கொள்ளாமல், குருவுக்குச் செய்யும் பரிகாரங்களை தட்சிணாமூர்த்திக்குச் செய்து வருவது காலத்தின் கோலம்.
குரு என்பவர். பிரம்மாவின் குமாரரான ஆங்கீரஸ ரிஷியின் குமாரர். அவர் சிவபெருமானைக் குறித்து தவம் இயற்றி, தேவர்களுக்கு குருவாகவும், நவக்கிரகங்களில் ஒருவராகவும் இருக்கும் பேற்றினைப் பெற்றார். இந்த குருவுக்கே, பிரஹஸ்பதி, வாசஸ்பதி, குரு என்று பல பெயர்கள் உண்டு. தேவர்களுக்குத் தலைவர் என்பதால் இவர் தேவகுரு என்று அழைக்கப்படுகிறார்.
பொன்னாலான ஆபரணங்கள் பல பூண்டவரான இவர், வடக்குத் திசை நோக்கி இருப்பவர் என்றும், உலக உயிர்களுக்கு போகங்களை அருள்பவர் என்றும், திருமணங்களைக் கூட்டுவிப்பவர் என்றும் புராதன நூல்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தட்சிணாமூர்த்தியோ ஞான ஒளியாக, மூல சிவமாக யோகத்தில் அமர்ந்துள்ளார். அவர் தரித்திருப்பதும் பொன்னாடையல்ல. அமர்ந்த திசையும் வடக்கு அல்ல. கல்லால மரத்தின் அடியில் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர். கல்லாடை அணிந்து, காட்சி தருபவர். காமனை வென்றவர். யோகத்தில் மோன தலத்தில் ஆழ்ந்தவர். ஞானம் அருள்பவர். இப்படி பல விஷயங்கள், நவக்கிரங்களில் ஒருவரான குரு பகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் வேற்றுமையைப் பறைசாற்றுகின்றன.
source : Dinamani |
|
|
|
|
|