|
NEWS REPORT: வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண் Jun 16, 14 |
|
|
|
18-ஆம் நூற்றாண்டில் சிவகங்கை அரண்மனையை ஆக்கிரமித்த ஆங்கிலப் படையின் ஆயுதக் கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்தவர், வீரமங்கை குயிலி. இது சிவகங்கையை வேலுநாச்சியார் மீட்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
விடுதலைப் போராளி குயிலியின் தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழக அரசு வேலு நாச்சியாருக்கு அமைத்துள்ள மணிமண்டபத்தில் குயிலுக்கும் நினைவுத் தூணை அமைத்துள்ளது.
1772-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி ஆங்கில கம்பெனி படைக்கும் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத தேவருக்கும் காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் மன்னரும், அவரது இளையராணியுமான கௌரி நாச்சியாரும் பீரங்கித் தாக்குதலுக்குப் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து பட்டத்து ராணியான வேலு நாச்சியார் ஆங்கில படையிடமிருந்து சிவகங்கையை மீட்க கொல்லங்குடியிலிருந்து தப்பி, திண்டுக்கல்லை அடுத்த விருப்பாட்சியில் கோபால நாயக்கரிடம் தஞ்சம் புகுந்தார்.
நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் விருப்பாட்சிக்குச் சென்று வேலு நாச்சியாரைச் சந்திக்க வேண்டும் என சிவகங்கையில் அறிவிக்கப்பட்டது. இளம் பெண்ணான வீரம் செறிந்த குயிலியின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆண், பெண் என்ற பேதமின்றி விருப்பாட்சிக்குச் சென்றனர்.
போர்க் களத்தில் பெண்களின் பங்கினை உருவாக்கும் புரட்சிக் கருத்தைக் கொண்ட வேலு நாச்சியார் அப் படைக்கு நாட்டுப் பற்று, அர்ப்பணிப்பு, நம்பிக்கை, வீரம் நிறைந்தவரைத் தேர்வு செய்யும் வகையில் தலைமையைத் தேடியபோது இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற குயிலியை பெண்கள் படையின் தளபதியாகத் தேர்வு செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்த ஹைதர் அலியிடம் படை உதவிகளைப் பெற்ற வேலு நாச்சியார் 1780-இல் பெரும் படையுடன் சிவகங்கையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்கப் புறப்பட்டார். மூன்று பிரிவுகளாக படைகளை அனுப்பி போரிட்டதில், சிவகங்கையைத் தவிர்த்து மற்ற பகுதிகளை வேலு நாச்சியார் மீட்டார். சிவகங்கை அரண்மனை ஆங்கிலேயர் வசம் இருந்தது. இதனை மீட்க குயிலி ஒற்றனைப் போல செயல்பட்டு, தசரா விழாவில் பெண்களுக்கு அரண்மனையில் உள்ள கோயிலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை ராணியிடம் கூறி பெண்கள் படையினருடன் கோயிலுக்குச் செல்வதைப் போலச் சென்று போரிடலாம் என யோசனை தெரிவித்தார்.
பெண்கள் படையுடன் பக்தர்களைப் போல நுழைந்த குயிலியின் படைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத ஆங்கிலேயப் படைத் தளபதி, அரண்மனையில் இருந்த ஆயுத கிட்டங்குகளில் உள்ள துப்பாக்கிகளைக் கொண்டு விடுதலை போராளிகள் மீது தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்தார். வெறும் வாள்களையும், வளரிகளையும் கொண்டு போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த குயிலி அரண்மனை ஆலயத்தில் விளக்கேற்றுவதற்காக வைத்திருந்த எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிட்டங்கியில் குதித்து அவற்றை அழித்து தானும் மறைந்தார். குயிலின் தியாகத்தால் சிவகங்கை மீட்கப்பட்டது வரலாறு.
இழந்த நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து மீட்ட வேலு நாச்சியாருக்கு சிவகங்கையில் தமிழக அரசு மணிமண்டபத்தை அமைத்து வருகிறது. இந்த மணிமண்டபத்தில் விடுதலைப் போராளியான குயிலியின் தியாகத்தைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு நினைவுத் தூணையும் அரசு இங்கு அமைத்துள்ளது.
பணிகள் நிறைவுற்ற நிலையில் உள்ள வேலு நாச்சியார் மணிமண்டபமும், குயிலிக்கான நினைவுத் தூணும் விரைவில் திறக்கப்பட உள்ளன.
source : Dinamani |
|
|
|
|
|