Nagaratharonline.com
 
லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு டி.ஐ.ஜி. உத்தரவு  Feb 1, 10
 
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையை சேர்ந்தவர் பழனியப்பன். மின் வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் நல்லழகன். இருவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. 21-ந்தேதி இருவரும் மோதிக்கொண்டனர். இதில் காயம் அடைந்த 2 பேரும் பொன்னமராவதி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

இந்த நிலையில் இருதரப்பினரும் நெற்குப்பை போலீசில் புகார் செய்ய சென்றனர். இதில் நல்லழகன் மனைவி சரசு கொடுத்த புகாரை தொடர்ந்து பழனியப்பன். இவரது மனைவி, 2 மகன்கள், 2 மருமகள்கள் ஆகிய 6 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் டேனியல் செல்வநாதன் வழக்குப்பதிவு செய்தார்.

ஆனால் பழனியப்பன் கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் (22-ந்தேதி) 2 மாத கைக்குழந்தையுடன் இருந்த பழனியப்பனின் 2-வது மருமகளை இன்ஸ்பெக்டர் டேனியல்செல்வநாதன் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்த வழக்கில் மற்ற வர்களை கைது செய்யாமல் இருக்கவும், கைதான பெண்ணுக்கு ஜாமீன் கிடைக்கவும் இன்ஸ்பெக்டர் டேனியல் செல்வநாதன் ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பனின் மைத்துனர் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்த யோசனைப்படி ராமநாதன், இன்ஸ்பெக்டர் டேனியல்செல்வநாதனை தொடர்பு கொண்டு பணத்தை எங்கு கொண்டு வரவேண்டும் என கேட்டு உள்ளார்.

அதற்கு அவர், மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு விட்டு இரவில் ஊருக்கு வரும்போது பெற்று கொள்கிறேன் என்று கூறி உள்ளார். அதன்படி நேற்று இரவு 10.15 மணி அளவில் தனியாக ஜீப்பில் புறப்பட்டார்.

முன்னதாக ராமநாதனிடம் நான் ஏ.தெக்கூர் கிராமம் அருகே உள்ள நேதாஜி சிலை அருகே வருகிறேன். நீங்களும் அங்கு வாருங்கள் என்று கூறி உள்ளார். இதனால் ராமநாதன் அங்கு சென்றார். ஜீப்பில் வந்த இன்ஸ்பெக்டர் டேனியல்செல்வநாதன் அங்கு நின்று கொண்டிருந்த ராமநாதன் அருகே சென்று பணத்தை வாங்கினார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பி ரண்டு குமாரசாமி, இன்ஸ் பெக்டர்கள் பாண்டிய ராஜன், ராஜா மற்றும் போலீசார் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் டேனியல் செல்வநாதனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று அவரை சிவகங்கை கூடுதல் தலைமை குற்றவியல் நீதி மன்ற நீதிபதி ராமமூர்த்தி முன்பு ஆஜர்படுத்தினர். கைதான இன்ஸ்பெக்டரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியதால் இன்ஸ்பெக்டர் டேனியல்செல்வநாதனை சஸ்பெண்டு செய்து ராமநாதபுரம் டி.ஐ.ஜி. (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் உத்தர விட்டார். லஞ்சத்தை தடுக்க வேண்டிய போலீசாரே லஞ்சம் வாங்கி இருப்பது பொது மக்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் லஞ்சம் வாங்கியதாக 6 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது


source : maalai malar