|
அலட்சிய மருத்துவத்தினால் கண்ணை இழந்த நபருக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு Jul 24, 14 |
|
கண் அறுவை சிகிச்சையின் போது அலட்சியமாகச் செயல்பட்டதனால் சென்னையைச் சேர்ந்த 62 வயது நபர் கண்பார்வையை இழந்தார். இவருக்கு தனியார் மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஆகியோர் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்பு உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட 62 வயது நபரின் பெயர் பாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்திருந்த டாக்டர் எஸ்.வெங்கடேஷ் என்பவரை 2005ஆம் ஆண்டு கண்பார்வை பிரிச்சனை தொடர்பாக ஆலோசனை செய்தார்.
இதனையடுத்து அவருக்கு கண்புரை அகற்ற அறுவை சிகிச்சைத் தேவைப்படுகிறது என்றும், கண்ணுக்குள் லென்ஸ் பொருத்தப்படவேண்டும் என்றும் டாக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
கண்புரை அகற்ற அறுவைசிகிச்சை சாலிகிராமத்தில் உள்ள பரணி மருத்துவமனையில் நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்து ஒருநாள் கழித்து பாலகிருஷ்ணனுக்கு கண்ணில் பயங்கர எரிச்சல் ஏற்பட்டது. உடனே சங்கரா நேத்ராலயாவுக்கு மேல் சிகிச்சைக்காக அவர் அனுப்பப்பட்டார். அங்கு கண்ணுக்குள் வைக்கப்பட்ட லென்ஸ் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பிறகு அந்த லென்ஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் லென்ஸ் தூய்மையற்று, கிருமித் தொற்றுடன் மாசடைந்திருப்பது தெரியவந்தது.
தொற்றுக்கிருமியை குணப்படுத்த முடியவில்லை பாலகிருஷ்ணன் இடது கண்ணை இழந்தார். பிறகு அவரது இடது கண் அகற்றப்பட்டு செயற்கைக் கண் பொருத்தப்பட்டது.
அறுவைசிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனை தங்களது ஆபரேஷன் தியேட்டரை வாடகைக்கு விடும் பழக்கம் உள்ளது தெரியவந்தது. இந்தக் குறிப்பிட்ட கண் அறுவைசிகிச்சை நடப்பதற்கு முன்பாக அதே தியேட்டரில் மூலநோய் அறுவைசிகிச்சை நடந்ததே பிரச்சினைக்குக் காரணம் என்று டாக்டர் வெங்கடேஷ் பின்பு தெரிவித்தார்.
இதனையடுத்து நுகர்வோர் குறிதீர்ப்பு மையம் டாக்டர் வெங்கடேஷ் ரூ.1 லட்சமும், அறுவைசிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனை ரூ.4.லட்சமும் நஷ்ட ஈடு கொடுக்குமாறு உத்தரவிட்டது.
Source : THE HINDU |
|
|
|
|
|