Nagaratharonline.com
 
NEWS REPORT: பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?  Jul 24, 14
 
பான் கார்டு வைத்திருக்கும் தனிநபர் வருமானக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. இருப்பினும் வரி கணக்கு தாக்கல் செய்வது நல்லது. ஒருவேளை கணக்கு தாக்கல் செய்வோர் முதலீடு செய்வது, கட்டிடம் வாங்குவது, தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவற்றில் கடந்த காலங்களில் ஈடுபட்டிருந்தால், அதுகுறித்து எதிர்காலத்தில் மதிப்பீடு செய்வதற்கு வருமான வரி அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கும். முதலீட்டாளரும் வருமானம் வந்த வழியை ஆதாரமாகக் காட்ட முடியும்.

ஆடிட்டர் மூலமாகத்தான் கணக்கு தாக்கல் செய்ய அவசியமில்லை. கணக்கு தாக்கல் செய்வதற்கு உதவி புரிபவராகத்தான் ஆடிட்டர்கள் உள்ளனர். வரி தொடர்பான விவரங்கள் தெளிவாகத் தெரிந்து அதன் நடைமுறைகள் புரிந்திருந்தால் அவரவரே கூட வரி கணக்கு தாக்கல் செய்யலாம். ஆண்டு வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால் அவரது கணக்குகள் ஆடிட்டரால் தணிக்கைச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இத்தகைய கணக்கு விவரம் செப்டம்பர் 30-ம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ்விதம் செய்யத் தவறினால் வருமான வரி அலுவலகம் மொத்த வருவாயில் அரை சதவீதத்தை அபராதமாக விதிக்கும். அல்லது ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதில் எது குறைவான தொகையோ அத்தொகை அபராதமாக விதிக்கப்படும்.